பெண் பள்ளி முதல்வரை கைது செய்த உத்தரகாண்ட் முதல் அமைச்சர்

டேராடூன்

த்தரகாண்டில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளி பெண் முதல்வரை கைது செய்ய உத்தரகாண்ட் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர காசி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணி புரிபவர் உத்ரா பகுகுணா.   உத்தரகாண்ட்  முதல்வர் திரிவேந்திர சிங் ரவத் ஜனதா தர்பார் என்னும் மக்களின் குறைகேட்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.  57 வயதான இந்தப் பெண் பள்ளி முதல்வர் ஜனதா தர்பார் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அப்போது உத்ரா தாம் 25 வருடங்களாக மிகவும் சிறிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வருவதால் தன்னை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுத்தார்.   அதை ஏற்க முதல்வர் மறுத்துள்ளார்.   அதைத் தொடர்ந்து அவருடன் உத்ரா வாதிட தொடங்கி உள்ளார்.    அதனால் கோபம் அடைந்த முதல்வர் ரவத் அவரிடம் கடுமையாக சப்தம் போட்டுள்ளார்.

மேலும் பொறுமையை இழந்த முதல்வர் தனது மைக் மூலம்”இந்த பெண்ணை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யுங்கள்.   அவரை இப்போதே கைது செய்யுங்கள்” என கத்தி உள்ளார்.  அங்கிருந்து உத்ரா சத்தமிட்டபடி வெளியேறி உள்ளார். அவரை காவல்துறையினர் கைது செய்து அன்று மாலையே விடுவித்துள்ளனர்.

ஒரு பெண் பள்ளி முதல்வர் கோரிக்கை எழுப்பியதற்காக அவரைக் கைது செய்யச் சொன்ன நிகழ்வு சமூக வலை தளங்களில் பரவி வைரலாகியது.   பல தரப்பட்ட மக்களும் அரசியல் தலைவர்களும் முதல்வர் பொறுமை இல்லாமல் பெண்ணிடம் கடுமையாக நடந்துக் கொண்டதாக  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதை ஒட்டி முதல்வர் ரவத், “இனி பணியிட மாற்றம் குறித்து ஜனதா தர்பாரில் எந்த புகாரும் அளிக்கக் கூடாது.   அரசுப் பணியாளர்கள் பணியிட மாற்றம் அரசின் விதிகளுக்கிணங்க நடக்கும்.    ஜனதா தர்பாரில் பள்ளி முதல்வர் உத்ரா மரியாதைக் குறைவாக நடந்துக் கொண்டார்.   மேலும் என் மீது கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார்.  அதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Video courtesy : You Tube