Random image

மனிதர்களை போல் விலங்குகளுக்கும் அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளும் உண்டு…உயர்நீதிமன்றம்

டேராடூன்:

‘‘உயிர் வாழும் மனிதர்களுக்கு உள்ளது போல் சட்டப்பூர்வ உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் என அனைத்தும் விலங்குகளுக்கும் உள்ளது’’ என்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா-நேபாளம் இடையே குதிரை வண்டி இயக்கப்பட்டு வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சாம்பவாட் மாவட்டம் பேன்பாஸா பகுதியில் இருந்து இத்தகைய குதிரை இழுத்து செல்லும் இரு சக்கர வண்டிகள் இயக்கப்படுகிறது. இதற்கான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி நாராயண் தத் பாத் என்பவர் 2014ம் ஆண்டில் உத்தரகாண்ட் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ராஜீவ் சர்மா, லோக் பால் சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,‘‘பறவை முதல் நீர் வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கு இருப்பதை போல் அனைத்து உரிமைகளும் இருக்கிறது. உத்தரகாண்டின் ஒவ்வொரு குடிமகன்களும் விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவற்றின் நலன் காக்க வேண்டும். கால்நடைகளை துன்புறுத்தும் வகையிலான ஆயுதங்களுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. குதிரை, மாடுகளுக்கு உரிய வசிப்பிடம் இருப்பதை மாநகராட்சி அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.

இந்தியாவில் இருந்து நேபாளத்தக்கு பாரம் சமந்து கொண்டு குதிரை உள்ளிட்ட எந்த கால்நடையும் செல்ல அரசு அனுமதி வழங்க கூடாது. சரக்கு வாகனங்களில் 6 கால்நடைகளுக்கு மேல் ஏற்றிச் செல்லக் கூடாது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். 12 முதல் 30 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப நிலை நிலவும் போது கால்நடைகளை நடக்க வைத்து தான் அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கால்நடைக்கும் மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.