உத்தரபிரதேசம்: ‘‘எனது சகோதரரை சுட பாஜக எம்பி ஆட்களை நியமித்துள்ளார்’’….கபில் கான்

லக்னோ:

உத்தரப்பிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் டாக்டர் கபில் கானை எஸ்ஐடி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கபில் கானின் சகோதரர் காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என கபில்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கபில் கான் கூறுகையில், ‘‘எனது சகோதரரை சுட்ட நபரை 48 மணி நேரத்தில் கைது செய்வதாக உறுதியளித்தனர். ஒரு வாரமாகியும் யாரையும் கைது செய்யவில்லை. சிலரது உத்தரவுகளை பின்பற்றி போலீசார் செயல்படுகின்றனர். பன்ஸ்கான் தொகுதி பாஜக எம்.பி கமலேஷ் பஸ்வான் மற்றும் பால்தேவ் பிளாசா உரிமையாளர்கள் தான் துப்பாக்கியால் சுட்ட நபர்களை பணம் கொடுத்து நியமித்துள்ளனர்.

பஸ்வானுக்கும் எனது சகோதரருக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. பாஜக தலைவர்களால் எனது சகோதரர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’’ என்றார்.