டேராடூன்

த்தரகாண்ட் கல்வி அமைச்சர் கணக்குக்கும் ரசாயனத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சரியான விடை சொன்ன ஆசிரியை அவமதித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா ஜ க அரசில் கல்வி அமைச்சராக இருப்பவர் அரவிந்த் பாண்டே.  இவர் சமீபத்தில் டேராடூன் மகிளா இண்டர் காலேஜ் என்னும் ஒரு மகளிர் கல்லூரிக்கு திடீரென சென்றுள்ளார்.   சட்டென்று ஒரு வகுப்பறையில் நுழைந்துள்ளார்.  அங்கு ஒரு ஆசிரியை ரசாயனப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.    அமைச்சர் அடிக்கடி அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை கேள்வி கேட்பது வழக்கம்.    அது போல இந்த ஆசிரியையை சோதிக்க விரும்பி உள்ளார்.

அரவிந்த் பாண்டே கையில் ஒரு சாக் பீசை எடுத்துக்கொண்டு போர்டில் (-) + (-) = ? என எழுதி உள்ளார்.  அந்த ஆசிரியை (-) எனக் கூறி உள்ளார்.  அவர் எதனால் அப்படி சொன்னார் என்பதை புரிந்துக் கொள்ளாத அமைச்சர் “உண்மையான பதில் (+) ஆகும்   நான் கணிதம் படித்தவன்,  ஆயினும் எனக்கு விஞ்ஞானம் தெரியும்.   விஞ்ஞானம் படித்த உங்களுக்கு கணிதம் தெரியவில்லையே. ” என கேலி செய்து மாணவர்கள் முன்பு அவமானப் படுத்தி உள்ளார்.

பாண்டேவை பொறுத்த வரையில் (-) + (-) = + என சொன்னது கணித முறையில் சரி.    ஆனால் உண்மையில் ரசாயன தத்துவப்படி (-) + (-) = (-) என்பதே சரி.  அதை அந்த ஆசிரியை அவருக்கு விளக்கினார்.   ஆனால் அதை ஒப்புக் கொள்ளாத அமைச்சர். தான் சொன்னதே சரி என்றதுடன்,  “நீங்கள் ஒரு பெண் என்பதால் உங்களை மன்னிக்கிறேன்” எனக் கூறி விட்டு வகுப்பறையை விட்டு சென்றுள்ளார்.

சில மாணவிகள் அதை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்துள்ளனர்.    அவர்கள் அதை வேறு பெயரில் முகநூல் மற்றும் டிவிட்டரில் பதிந்தனர்.  அதை பலரும் ஷேர் செய்யவே அமைச்சர், “நான் அந்த ஆசிரியையை அவமானப்படுத்தும் என்ணம் எனக்கு இல்லை.  அந்த வகுப்பில் ஆசிரியையோ மாணவிகளோ எந்த ஒரு புத்தகமும் அப்போது வைத்துக் கொண்டு இருக்கவில்லை.  அதனால் நான் அதை கணித வகுப்பு என நினைத்தேன்.  கணிதப்படி நான் சொன்னது தவறென நிருபித்தால் நான் பதவி விலகத் தயார்” என கூறி உள்ளார்.

ஆனால் ஆசிரியை விளக்கியும் தான் சொன்னதே சரி என வாதிட்டது அமைச்சரின் கல்வி அறிவு இவ்வளவு தான் என உலகுக்கு காட்டி விட்டது என பலரும் மீடியாவில் கருத்து தெரிவித்துள்ளனர்.