ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்துள்ளார். .

கர்நாடக அரசு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “ வழக்கு விசாரணை முடிந்து நீண்ட நாட்களாகியும் தீர்ப்பு வழங்கப்படவில்லை” என்று கோரியதை அடுத்து, நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், “கர்நாடக அரசு கேட்டு கொண்டதால் இதை தெரிவிக்கிறேன் தீர்ப்பு ஏற்கெனவே எழுதப்பட்டு விட்டது இன்னும் ஒரு வார காலத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. வரும் 9ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து – குறிப்பாக – சசிகலா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதையடுத்து, அதிமுக டில்லி விவகாரங்களை கவனிக்கும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை அழைத்த சசிகலா, அவருடன் ஆலோசோனையில் ஈடுபட்டுள்ளார்.

“சாதகமாக தீர்ப்பு வந்தால் பரவாயில்லை. வேறு மாதிரி தீர்ப்பு வந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்துவருகிறார்கள்” என்று அதிகமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.