இன்று, “கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரம் பிறந்தநாள் (செப்டம்பர் 5 1872 ). அவரைப் பற்றி ஆழி.செந்தில்நாதன் எழுதிய முகநூல் பதிவு:
download (5)
வ.உ.சியின் “கப்பல் ஓட்டிய கதை” நமக்கெல்லாம் வெறும் சாகசமாகத்ததான் தெரியும்.
ஆனால் தமிழ்நாட்டின் சகல சாதி, மதத்தவர்களின் பங்கேற்போடு, இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு இனத்தவரின் கூட்டுறவோடு, ஆசியக் கண்டத்திலுள்ள யாரும் பங்கேற்கும் வகையிலான ஒரு தொழில் நிறுவனத் திட்டத்தை அவர் முன்மொழிந்த கதையும் அதன் முக்கியத்துவமும் யாருக்குத் தெரியும்? அதற்குப் பின்னால் உள்ள பொருளாதாரச் சிந்தனை யாருக்குத் புரியும்?
தொழில் வணிக்ம் என்றாலே தீட்டு போல பார்க்கும் பார்ப்பனீயப் பார்வை இங்கே நூற்றுக்கு 99 அறிவுஜீவிகளின் மண்டையில் உறைந்திருக்கிறது. நமது அறிவுஜீவிகள் வ.உ.சி.யின் பொருளாதார எதிர்வினையைப் பற்றி பேசவே மாட்டார்கள் (ஆனால் காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தை சிலாகித்து எழுதுவார்கள்).
இன்னொரு பக்கம் வ.உ.சியைக் கொண்டாடுபவர்களில் அவரை ஒரு சுதேசிப் போராளியாக மட்டுமே நினைத்துக்கொண்டாடுகிறார்கள். ஆனால் இப்படிப் பார்ப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது.. அவர் சுதேசி மட்டுமல்ல. அதாவது, இந்துத்துவ சக்திகளில் சிலர் முன்மொழியும் சுதேசி அல்ல அவரது சுதேசி. அது சாதி காக்கும் சுதேசி அல்ல.
உலக வணிகத்தில் இந்தியாவின் பங்கேற்பை உறுதிசெய்கிற வியூகத்தைக் கையிலெடுத்த உலக வணிகரும்கூட. ஆங்கிலேயர் சார்பு நிலை என்பதை மறுப்பதால் அவர் சுதேசி ஆகிவிடவில்லை. ஒருவிதத்தில் இன்று பேசப்படும் globalization from bottom என்பது போன்ற கருத்துகளுக்கு அவர் முன்னோடி.
யாரெல்லாம் அவரை ஆதரித்தார்கள் என்ற வரலாற்றைப் பாருங்கள். புல்லரிக்கும். அவரது நீிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் – வள்ளல் பாண்டித்துரை தேவரும் சேலம் விஜயராகாவாச்சாரியும் ஜனாப் ஹாஜி முஹம்மது பக்கீர் சேட்டும் என அவரது வியூகப்படை மிகவும் விசாலமானது. பிள்ளையவர்கள் செய்த செயல் “பிள்ளை்” செயல் அல்ல. அது பிள்ளை விளையாடுமல்ல. சாதி மதம் கடக்காமல் தமிழரை இணைக்கமுடியாது. அதனால்தான் அவரது வாழ்வின் இறுதிக் கட்டம் அவரை சுயமரியாீதை இயக்கத்தோடு நெருங்கவைத்தது.
சுயமரியாதை இயக்கத்தின் வரவு சுப்பிரமணிய பாரதியைப் புலம்பவைத்தது. சிதம்பரனாரை ஈர்த்தது. ஒருவேளை அந்த இயக்கத்தில் சிதம்பரனார்களின் (சாதி அடிப்படையில் சொல்லவில்லை, சிந்தனைப் போக்கில் அடிப்படையில் சொல்கிறேன்) பங்கேற்பு தொடர்ந்து இருந்திருந்தால், சுயமரியாதை இயக்கத்தின் திசைவழியும் வேறுமாதிரி இருந்திருக்கும்.
சிதம்பரனார் பூர்ஷ்வாதான் தோழர்களே! ஆனால் அவர் தொழிற்சங்க வரலாற்றிலும் முக்கியமானவர். எந்தத் தூத்துக்குடியை சுதேசி கப்பல் வணிகத்தின் தலைமையிடமாக ஆக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதே தூத்துக்குடியில் கூலி உயர்வுக்காகவும் வாரம் ஒரு நாளை விடுமுறை வேண்டியும் தொழிலாளர்களைப் போராடத்தூண்டியவர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வெளிப்டையாக ஆதரவாக இருந்தவர், அதைத் தூண்டியவர். பின்பு அதனாலேயே ஆங்கிலேயர்களின் எதிர்ப்பை பல மடங்கு எதிர்கொண்டவர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தன் சொந்த நிதியை வாரியளித்து செல்வம் இழந்தவர்.
நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த அற்புதமான மனிதனை யார் கொண்டாடியிருக்கவேண்டும்?
தமிழ் அடையாளத்தைப் பேசுபவர்கள், சுயமரியாதை இயக்க வழிவந்தவர்கள், இடதுசாரிகள், ஏன் இந்திய தேசியவாதிகளும்கூட இவரை கொண்டாடியிருக்கவேண்டும்.
ஆனால், இவர் மறக்கப்பட்டுவிட்டார். இவர் பெயரைக்கூட பலர் வ.ஊ.சி என்றுதான் எழுதுவார்கள்!
யார் யார் பேரன்மார்களோ நாட்டை ஆளுகையில் ஆளத்துடிக்கையில், சிதம்பரனாரின் வழித்தோன்றல்கள்????
சிதம்பரனார் ஒரு நிஜமான தலைவர். விடுதலைப் போராளி. இரண்டாயிரம் தமிழர் வணிகச் சிந்தனையின் தொடர்ச்சி.
அதனால்தான் அவரை புரிந்துகொள்வது தமிழர்களுக்குச் சிரமமாக இருக்கிறதோ என்னவோ?
கடந்த ஆண்டு ஒரு பகற்பொழுதில் சிங்கப்பூர் சென்றபோது, நக்கவரத் தீவுகளைத் தாண்டி சுமத்ரா தீவினை ஓட்டி விமானம் சென்றபோது, கீழே பல கப்பல்களைப் பார்த்தேன். ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் வலம்வந்த அந்த நீர்ப்பகுதியில், நீரிணையில், சிதம்பரனாரின் சுதேசி நாவாய்ச் சங்கத்தின் கப்பல்களும் கலந்து நீரில் செல்வதுபோல ஒரு மனிச்சித்திரத்தை எனக்கு நானே எழுப்பிக்கொண்டு பெருமூச்சுவிட்டேன்.
வ.உ.சிகள் மீண்டும் எழுவார்கள்.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆள்வார்கள்.