அதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி – டிரம்ப் தீவிர முயற்சி

 

நியூயார்க் :

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மருத்துவ நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தங்கள் பரிசோதனை முயற்சியை வெற்றிகரமாக முடிப்போம் என்று உறுதிகூறுவதை ஏற்றுக்கொண்டு இதனை வரன்முறைப் படுத்தும் அமைப்புகள் அனுமதித்தால் வரும் அக்டோபர் மாதத்தில் தடுப்பூசி கனவு நிறைவேற வாய்ப்பிருக்கிறது.

நவம்பர் மாதம் 3 ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கிடைக்க தேவையான நடவடிக்கையெடுக்கப்படும் என்று கூறிவரும் டிரம்ப், மருந்து தயாரிக்கும் கம்பெனிகளின் இந்த வாக்குறுதி முயற்சி வெற்றிபெற்றால் பெரிதும் மகிழ்ச்சியடைவார் என்று கூறப்படுகிறது.

பொது சுகாதார அவசரக் காலங்களில் பரிசோதனைத் தரவுகளை முறையான மறுஆய்வு செய்வதற்கு முன்னர் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) அதிகாரம் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கான அவசர கால அங்கீகார வழிகாட்டலை ஜூன் மாதத்தில் எஃப்.டி.ஏ வெளியிட்டது. அதில், அவரசகால பயன்பாட்டு அங்கீகாரம் பெற்ற நிறுவனம், குறித்த காலத்தில் சந்தைப்படுத்த தேவையான ஒப்புதலைப் பெறவேண்டும் அல்லது அந்த அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஆரோகியமான நபர்களுக்கு தடுப்பூசி பயன்படுத்த அவசரகால அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை, மாறாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு ஒப்புதல் அளிக்கவே இந்த அங்கீகாரம் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து இரத்த பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமையன்று, அவசரகால அடிப்படையில் எஃப்.டி.ஏ அனுமதியளித்தது. இந்த சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்படும் உயிர்களின் எண்ணிக்கை மிகைப்படுத்திக் காட்டப்பட்ட தரவுகள் குறித்து விளக்கமளித்த எஃப்.டி.ஏ கமிஷனர் தரவுகளில் தவறு இருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதேபோல், கொரோனா வைரஸ் குறித்த பல்வேறு பரிசோதனைகளுக்கு தனது அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை எஃப்.டி.ஏ பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எச் 1 என் 1 தடுப்பூசி பரிசோதனையின் போது முறையான பரிசோதனை இல்லாமல் செயல்படுத்த நடத்தப்பட்ட ஆய்வில் 64 சதவீத அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இதற்கு அவசரகால பயன்பாட்டு அதிகாரத்தை வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கொரோனா வைரசுக்கான தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டு அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என்று நுகர்வோர் உரிமைகள் கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எஃப்.டி.ஏ தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுப்பூசிக்கான அங்கீகாரம் வழங்காமல் இருப்பதாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டிய டிரம்ப், தான் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பை இந்த கட்டுப்பாட்டு அமைப்புகள் சீர்குலைப்பதாக குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டிற்கு எஃப்.டி.ஏ கமிஷனர் ஸ்டீபன் ஹான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எஃப்.டி.ஏ-வின் மருந்து கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான பீட்டர் மார்க்ஸ், ஒரு தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு முன்பே அதை அனுமதிக்குமாறு அழுத்தம் கொடுப்பதாக உணர்ந்தால் தான் ராஜினாமா செய்யப்போவதாகக் கூறினார்.

முன்னாள் எஃப்.டி.ஏ தலைமை விஞ்ஞானி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெஸ்ஸி குட்மேன் கூறுகையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினைன் சிகிச்சைக்கு, ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் மற்றவர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டதால் அவசரகால அங்கீகாரம் வழங்கப்பட்டது, பின்னர் தரவுகளின் அடிப்படையில் அந்த சிகிச்சை சிறந்த பலனளிக்காததால் அது திரும்பப்பெறப்பட்டது. ஆனால், தடுப்பூசி விஷயத்தில் இதுபோல் செய்யப்படுவது அவசரகால அங்கீகாரத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குலைந்துவிடும் என்று கூறினார்.

“அரசாங்கம் விதிமுறைகளை மதிக்காத ஒரு சூழ்நிலையையே நாம் இப்போது காண்கிறோம்” என்று குட்மேன் மேலும் கூறினார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் மற்றும் பயோஎன்டெக் எஸ்.இ உடன் இணைந்து ஃபைசர் நிறுவனம் ஆகியவை அக்டோபருக்குள் நிகழ்வு இருக்கும் என்று கூறியுள்ளன. மாடர்னா இன்க் நிறுவனம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தனது பரிசோதனை குறித்த தரவுகள் எதிர்பார்க்கப்படும் என்று கூறியிருக்கிறது.