கட்டுரையாளர்:  கே.எஸ்.சுரேஷ்குமார்

ரு குறிப்பிட்ட சூழலில் பிறந்த குழந்தை அச்சூழலின் நிறை குறைககளை கிரகித்து தன் உடம்பை பேணிக்கொள்ளும்படி இவ்வுடல் படைக்கப்பட்டிருக்கிறது. நவீன யுகத்தில் தன் உடலை ஒரு மெஷினுக்கு ஒப்பாக பராமரித்து வருகிறார்கள்.

வருடம் ஒருமுறை ஆயில் சர்வீஸ் ஓவர் ஆல் போல ஒரு மெக்கானிக் போன்ற மருத்துவர் நம்மை மெய்ண்டனன்ஸ் செய்கிறார். இது நவீன மருத்துவத்தின் அநுகூலம். எதற்கு ரிஸ்க்?

முன்பெல்லாம் பத்து பெற்றால் நான்கு செத்துவிடும் இரண்டு சவலையாகும். இடையில் ஏதேனும் கொள்ளைநோய்க்கு பலியாகும்.இப்போது இந்த பலிகள் நவீன மருத்துவத்தின் தயவில் குறைந்துள்ளன.

ஆகவே பெரும்பான்மையான மக்கள் அலோபதியை பிந்தொடர்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அதன் ஆய்வு முடிவுகள்/ பலன்கள் ஓரளவு துல்லியமாக இருக்கின்றன். நவீன யுகத்தாரும்,  நம்பிக்கை – பாரம்பரிய மருத்துவம் என்று ரிஸ்க் எடுக்காமல் அலோபதி பக்கம் ஒதுங்கிவிடுகின்றனர்.

இதன் அர்த்தம் பாரம்பரிய மருத்துவம் பலவீனமானது என்பதல்ல. ஆய்வுகள் ஒப்பிட்டளவில் இதில் அதிக சாத்தியங்களுடன் இருக்கின்றது என்பதே. சமீப காலங்களில் உடல் பற்றிய பிரக்ஞையும் உணர்வு பற்றிய விழிப்புணர்வும் அதிகம் காணப்படுகிறது.

குறிப்பாக வாட்சப் போன்ற சமூக தளங்களில் நாளொன்றுக்கு நானூறு ஜிபி செலவளித்து இதனை பரப்புரை செய்கின்றனர் பலர். ஆர்கானிக் தக்காளியில் ஆரம்பித்து மரச்செக்கு எண்ணெய் வரை புழங்க ஆரம்பித்துவிட்டன. இது நல்ல வரவேற்கத்தகுந்த மாற்றம் எனலாம்.

ஆனால் எதற்கெடுத்தாலும் உடலே தன் பிரச்சினையை சரிசெய்துகொள்ளும் அதனால் மருந்து மாத்திரைகளே எனக்கு அவசியம் இல்லை எனவும் இதனுடன் சிலர் பயணப்படுவதையும் பார்க்கிறோம். எல்லா மருத்துகளும் பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பது அவர்கள் வாதம். இதுவும் நல்ல வாதம்தான். நம் உடல் சில சக்திகளைக் கொண்டிருப்பது உண்மைதான்.

ஆனால் ஒன்றை நாம் தீவிரமாக யோசித்துப் பார்க்க வேண்டும். ஒரு விவசாய நிலத்தைச் சுற்றி மிகப் பலமாக வேலி அமைத்து அதனிடையே சிறு துவாரமோ வழியே இருந்தால் அதனால் ஆகுபயன் என்ன? எலியோ நரியோ உள்ளே வந்து விளை நிலத்தை சேதப்படுத்தாதா? நம்மில் பெரும்பாலானோருக்கு மருந்து என்பது கெமிக்கல் மட்டுமே. அது ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விழுங்குவது. அதைவிட்டால் ஊசி. இது இடுப்பில் போடுவது. ஆக இது உடம்பில் செலுத்தப்பட்டுவிட்டால் சுத்தமாக இருக்கும் தேகத்தின் புனிதம் கெட்டுவிடும். வாய்வழியாக சுவைத்து உட்கொள்வது, ந்ரம்புகள் வழியாக மருந்தை உட்செலுத்துவது போக இன்ஹேல் எனப்படும் மூச்சு வழியாக உள்நுழைவதும் இருக்கிறது, மேற்புற தோலின் நுண்ணிய ஓட்டைகள் வழியாக உள்நுழைவதும் இருக்கிறது. இது போக உணவின் மூலம் உறிஞ்சப்படும் கெமிக்கல்களும் இருக்கின்றன.

அவ்வளவு ஏன்.. கண்களின் வழியே கூட புகை ஊடுருவும். நாளொன்றுக்கு நாற்பதாயிரம் வாகனங்கள் பயணப்படும் சூழலில் அவை வெளிவிடும் புகையைச் சுவாசிப்பதன் மூலம் நுறையீரல் அந்த கெடும் காற்றை சுவாசம் மூலம் உள்ளே தள்ளுகிறது.

அது போக என்னதான் சமையலில் முழுவதும் ஆர்கானிக் பொருட்களை பயன்படுத்தினாலும் எங்கேனும் ஓரு விருந்தினர் வீட்டிலோ திரையரங்கிலோ எதையாவது ஒரு கருமத்தை உள்ளே தள்ளிவிடுவோம். அப்போது அத்தனை தூரம் சேர்த்துவைத்த புனிதம் கெட்டுப்போகுமே! அதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம்?  வேண்டுமென்றால் ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்து அருவி நீரில் குளித்து ஆற்று நீரைக் குடித்து பழங்கள் காய்கள் என உண்டு ஆரோக்கியம் பேணலாம்.

ஆனால் எப்போதாவது ஒரு சிங்கத்தின் பிடியிலோ ஒரு கரடியின் பிடியிலோ செத்துவிடத்தான் போகிறோம். எப்போது ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போதே தாய்க்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து பழக்கிவிட்டோமோ அப்போதே அது கெமிகல் குழந்தைதான். அது மருந்து மாத்திரைகள் மூலம் வளர்வதில் மட்டும் நமக்கேன் பதட்டம் வருகிறது?

குழந்தையை விடுங்கள், நம்மில் எத்தனை பேர் இதுவரை காய்ச்சலுக்குக் கூட மருந்தை உட்கொள்ளாமல் இருந்திருப்போம். மருந்தே எடுக்காமல் இருந்தால் இரண்டு நாட்களில் குணமாகிவிடும்தான். ஆனால் அந்த இரண்டுநாட்கள் பொறுக்க நமக்கு முடிகிறதா? போதாக்குறைக்கு அனுதினமும் சர்க்கரை, ரத்த அழுத்தம் என மருந்துகள் எடுக்கும் நமக்கு ஏன் கெமிக்கல்கள் மீது இத்தனை கோபம்?

ஒரு பக்கம் தொழிற்சாலைகள், வாகனங்கள் என புழங்கவிட்டுவிட்டு மறுபக்கம் சுகாதாரம் பற்றி பேச நமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? ஆகவே இப்படி வைத்துக் கொள்வோம். எவரொருவர் தன் வாழ்நாளில் துளி மருந்தும் உட்கொள்ள வில்லையோ அவரின் பிள்ளைகளுக்கு ரூபெல்லாவோ விவேக்கோ தடுப்பூசியை நிராகரித்துக் கொள்ளட்டும்.

மற்றவர்கள் எப்போதும் போல இடுப்பை இறக்கிவிட்டு குத்திக் கொள்வோம். அது வலித்தால், கொஞ்சம் பக்கவி்ளைவுகளைக் கொடுத்தால்..  அது – நாம் இப்போது வாழும் நவீன வாழ்க்கைக்குக் கொடுக்கும் விலையாக இருக்கட்டுமே!