பெய்ஜிங்: இவ்வாண்டு இறுதிக்குள் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு தயாராக இருக்கக்கூடும் என்று அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (SASAC) தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. சீனாவை தொடர்ந்து, அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் என பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வைரசுக்கு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கின. இப்போது, சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் சந்தைக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டு அரசுக்கு சொந்தமான சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் (SASAC) தெரிவித்துள்ளது. 2000க்கும் மேற்பட்டோரிடம் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உகான் இன்ஸ்டியூட் ஆப் பயாலிஜிகல், பெய்ஜிங் இன்ஸ்டியூட் ஆப் பயாலஜி ஆகியவற்றின் சார்பில் இந்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது 2ம் கட்ட சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரு குழுக்களும் அரசுக்கு சொந்தமான மருந்துக் குழுவான சினோபார்முடன் இணைக்கப்பட்டுள்ளன, அதன் நிர்வாகத்தை அரசின் சொத்து மேற்பார்வை மற்றும் நிர்வாக ஆணையம் SASAC மேற்பார்வையிடுகிறது.