சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மாதங்களில் 5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. தொற்றின் 2வது அலையின் தாக்கத்திற்கு வயது பேதமின்றி ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். தொற்றுபரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழகஅரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பல பகுதிகளில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 17 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 2 லட்சத்து 19 ஆயிரத்து 342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில், 6,247 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 4,38,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 60 பேர் உயிரிழந்ததையடுத்து, இதுவரை 5,764 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 3,85,297 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். தற்போது 47,330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த 3 நாட்களில் தொடங்கும் என்று தெரிவித்தார். மேலும், அடுத்த 3 மாதங்களில் சுமார் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டு உள்ளதாகவும், கூறியவர், கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவருபவர்கள், தன்னிச்சையாக ஆக்சிஜன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.