டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. மொத்த பாதிப்பு 1,53,21,089 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை  குணமடைந்தோர் 1,31,08,582 ஆக அதிகரித்துள்ளத.தற்போதைய நிலையில்,  சிகிச்சையில் உள்ளோர் 20,31,977  பேர். இதுவரை 1,80,530  பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் நேற்று வரை தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் எண்ணிக்கை  12,71,29,113 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மருந்துகளுக்கும் சில மாநிலங்களில் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி மருந்து இறக்குமதி செய்யவும் மத்தியஅரசு தயாராகி வருகிறது.  இந்த மருந்து இந்த மாத இறுதியில் கிரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், இந்தியாவில் உள்ள பிரபல மருத்துவ வல்லுநர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன், கொரோனா  தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, மூலப்பொருள்களின் தேவை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.