உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு எதிராக 135 க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றனர். ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கவும், அது  பொதுவாக மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரவும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி மற்றும் சோதனை தேவைப்படுகிறது, ஆனால் விஞ்ஞானிகள் அடுத்த ஆண்டுக்குள் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்தை தயாரிக்கும் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SARS-CoV-2 மரபணுவைப் அறிந்ததும், ஜனவரி மாதம் முதல் இதற்கான வேலை தொடங்கியது. மனிதர்களில் முதல் தடுப்பு மருந்து பாதுகாப்பு சோதனைகள் மார்ச் மாதத்தில் தொடங்கியது.  ஆனால் இந்த ஆய்வுகளின் முன்னேற்றம் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. சிலரின் சோதனைகள் தோல்வியடையும். மற்றவை தெளிவான முடிவு இல்லாமல் முடிவடையும். ஆனால் ஒரு சிலரின் வைரஸுக்கு எதிராக, பயனுள்ள எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கவும்,  நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதிலும் வெற்றிபெறலாம்.

மனிதர்களில் சோதனைகளை எட்டிய அனைத்து தடுப்பு மருந்துகளின் நிலையும் இங்கே உள்ளது, அதோடு ஆய்வகத்தில் செல்களில் சோதிக்கப்படும்  அல்லது விலங்குகளில் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படும் நம்பிக்கைக்குரிய தடுப்பு மருந்துகளின் தேர்வும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து பரிசோதனை செயல்முறைகள்

ஒரு தடுப்பு மருந்தின் வளர்ச்சி – ஆய்வகத்திலிருந்து கிளினிக் வரை.

ஆரம்ப சோதனை: எலிகள் அல்லது குரங்குகள் போன்ற விலங்குகளுக்கு தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என்று பார்க்கப்படுகிறது.

கட்டம் I பாதுகாப்பு சோதனைகள்: விஞ்ஞானிகள் தடுப்பு மருந்தை குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அளவை பரிசோதிக்கவும், நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்பதை உறுதிப்படுத்தவும் வழங்குகிறார்கள்.

கட்டம் II விரிவாக்கப்பட்ட சோதனைகள்: குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எனக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கொடுத்து குழுக்களுக்கிடையே அதன் செயல்பாட்டில் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என கண்காணிக்கப்படுகிறது. இந்த சோதனைகள் தடுப்பு மருந்தின் பாதுகாப்பையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் அளவு மற்றும் திறனும் சோதிக்கப்படுகிறது.

கட்டம் III திறன் சோதனை: விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்து, மருந்தளிக்காத அல்லது போலி மருந்து கொடுக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட்டு நோய் கட்டுப்படுத்தப்படும் திறன் சோதனை செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் தடுப்பு மருந்து கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறதா என்பதை தீர்மானிக்கும் கட்டம் ஆகும்.

ஒப்புதல்: ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு முடிவுகளை மதிப்பாய்வு செய்து, தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள். ஒரு அபாயகரமான தொற்றுநோய்களின் போது, முறையான ஒப்புதல் பெறுவதற்கு முன்பு ஒரு தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் பெறலாம்.

வார்ப் ஸ்பீட்: யு.எஸ். அரசாங்கத்தின் ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு திட்டம், தடுப்பு மருந்துகள் செயல்படுகின்றன என்பதற்கான ஆதாரம் வழங்கப்படுவதற்கு முன்னரே, பில்லியன் கணக்கான டாலர்களை அரசின் கூட்டாட்சி நிதி மற்றும் ஆதரவைப் பெற ஐந்து தடுப்பு மருந்து திட்டங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஒருங்கிணைந்த கட்டங்கள்: தடுப்பு மருந்து வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான மற்றொரு வழி, கட்டங்களை இணைப்பது. சில கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் இப்போது கட்டம் I / II சோதனைகளில் உள்ளன. அதாவது அவை முதன்முறையாக நூற்றுக்கணக்கான மக்கள் மீது சோதிக்கப்படுகின்றன.

மரபணு சார்ந்த தடுப்பு மருந்துகள்

நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டுவதற்கு கொரோனா வைரஸின் சொந்த மரபணுக்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைப் பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள்.

கட்டம் II  – வார்ப் ஸ்பீட் – மாடர்னா நிறுவனம்  

மாடர்னாவின் mRNA தடுப்பு மருந்து மே மாதத்தில் பங்குச் சந்தையை வெறும் எட்டு பேரின் டேட்டாக்களுடன் திகைக்க வைத்தது. வல்லுநர்களின் குறைந்தபட்ச எதிர்வினைகளையும் பெற்றது. ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்டின் ஒரு பகுதியாக, அமெரிக்க நிறுவனம் ஜூலை மாதம் மூன்றாம் கட்ட சோதனைகளை துவங்கவுள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர்களின் தடுப்பு மருந்துகள் தயாராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

கட்டம் I கட்டம் II  – வார்ப் ஸ்பீட் – பயோஎன்டெக்,  ஃபைசர் & ஃபோசுன் பார்மா

ஜெர்மனி நிறுவனமான பயோஎன்டெக் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஃபைசர் மற்றும் சீன மருந்து தயாரிப்பாளரான ஃபோசுன் பார்மா ஆகியோருடன் இணைந்து Mrna தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. மே மாதத்தில், ஃபைசர் தடுப்பு மருந்துக்கான மனித சோதனைகளை நடத்தவுள்ளதாக அறிவித்தது. ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்டின் மற்றொரு பயனாளியான ஃபைசர், சோதனைகளில் அனைத்தும் சரியாக நடந்தால், இலையுதிர்காலத்தில் (Autumn) அவசரகால பயன்பாட்டிற்கு சில மில்லியன் டோஸ் தேவைப்படும் என கணக்கிட்டு பணிகளை கவனித்து வருகின்றனர்.

கட்டம் I – இன்னோவியோ

மே மாதத்தில், அமெரிக்க நிறுவனமான இன்னோவியோ ஒரு ஆய்வை வெளியிட்டது. அவற்றின் DNA அடிப்படையிலான தடுப்பு மருந்து எலிகளில் வைரஸ் எதிர்ப்பு ஆன்டிபாடிகளை உருவாக்கியது. முதலாம் கட்ட சோதனைகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இதே சோதனைகள் ஜூன் மாத இறுதியில் தென் கொரியாவில் தொடங்கவுள்ளன.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

இம்பீரியல் கல்லூரி லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தன்னைத்தானே நகலெடுத்து இரட்டிப்பாக்கிக் கொள்ளும்  RNA தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இது நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதற்காக வைரஸ் புரதத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கட்டம் I / II சோதனைகளை ஜூன் 15 ஆம் தேதி தொடங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெர்னெக்விட்டி குளோபல் ஹெல்த் என்ற புதிய நிறுவனம் மூலம் தடுப்பு மருந்தை தயாரித்து விநியோகிக்க மார்னிங்சைட் வென்ச்சர்ஸ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

மார்ச் மாதத்தில், டிரம்ப் நிர்வாகம், CureVac நிறுவனத்தை, அதன் ஆய்வுகளை ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற கேட்டுக் கொண்டது. இதற்கும், இந்த நிறுவனம், இதன் RNA வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட கோவிட் -19 க்கான மனித சோதனைகளைத் தொடங்கவில்லை. ஆனால் அதே RNA வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரேபிஸ் தடுப்பு மருந்து ஜனவரி மாதம் முதல் கட்ட பாதுகாப்பு சோதனைகளை நிறைவு செய்துள்ளது. இந்த ஜெர்மன் தயாரிப்பு நிறுவனம் அதன் ஜெர்மனி தொழிலகத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பு மருந்து டோஸ்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் வெக்டர் சார்ந்த தடுப்பு மருந்துகள்

கொரோனா வைரஸ் மரபணுக்களை, மனிதர்களின் நோயெதிர்ப்பு செல்களுக்கு வழங்க ஒரு வைரஸையே பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகமாக தூண்டும்.

கட்டம் II கட்டம் III – வார்ப் ஸ்பீட் – அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பு மருந்து ChAdOx1 சிம்பன்சி அடினோ வைரஸை அடிப்படையாகக் கொண்டது. இந்த தடுப்பு மருந்து இங்கிலாந்து மற்றும் பிரேசிலில் இரண்டாம் கட்ட / மூன்றாம் பரிசோதனைகலைத் தொடங்குகிறது. ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் மூலம் நிதியளிக்கப்படும் இந்த திட்டம் அக்டோபர் மாதத்திற்குள் அவசரகால தடுப்பு மருந்துகளை வழங்கலாம் என நம்பப்படுகிறது. ஜூன் மாதத்தில், அஸ்ட்ராசெனெகா அவர்களின் மொத்த உற்பத்தி திறன் இரண்டு பில்லியன் அளவுகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கட்டம் II – கன்சினோ பயோலாஜிக்ஸ்

சீன நிறுவனமான கன்சினோ பயோலாஜிக்ஸ், நாட்டின் இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியில் உள்ள உயிரியல் நிறுவனத்துடன் இணைந்து, Ad5 எனப்படும் அடினோவைரஸை அடிப்படையாகக் கொண்ட ஒரு தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகிறது. மே மாதத்தில் அவர்கள் லான்செட்டில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டனர். மேலும், எந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்திலிருந்தும் முதல் கட்ட சோதனை முடிவுகள் தி சைன்ஸ் ஆய்வு இதழில் வெளிவந்தது.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL) – வார்ப் ஸ்பீட்  – ஜான்சன் & ஜான்சன்

பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டீகோனஸ் மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் குரங்குகளில் Ad26 எனப்படும் அடினோவைரஸை பரிசோதித்து வருகின்றனர். ஆபரேஷன் வார்ப் ஸ்பீட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியளிக்கப்படும் ஜான்சன் & ஜான்சன், ஜூன் மாத இறுதியில் கட்டம் I / II சோதனைகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL) – நோவார்டிஸ் நிறுவனம்

மாசசூசெட்ஸ் கண் மற்றும் காது மருத்துவமனை உருவாக்கிய மரபணு சிகிச்சையின் அடிப்படையில் சுவிஸ் நிறுவனமான நோவார்டிஸ் ஒரு தடுப்பு மருந்து தயாரித்து வருகிறது. கொரோனாவும் அடினோ வைரஸ்களோடு தொடர்புடையது என்பதால், கொரோனா வைரஸ் மரபணு பகுதிகளை நோயெதிர்ப்பு செல்களுக்கு எளிதாக வழங்கும். கட்டம் I சோதனைகள் 2020 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளன.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL) – வார்ப் ஸ்பீட் – மெர்க் நிறுவனம்
அமெரிக்க நிறுவனமான மெர்க் மே மாதத்தில் வெசிகுலர் ஸ்டோமாடிடிஸ் வைரஸ்களிலிருந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்குவதாக அறிவித்தது. இதே அணுகுமுறையை பயன்படுத்தி ஏற்கனவே, எபோலாவுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை வெற்றிகரமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிறுவனம் IAVI உடன் ஒப்பந்தத்தில் உள்ளது.

புரத அடிப்படையிலான தடுப்பு மருந்துகள்

நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு கொரோனா வைரஸ் புரதம் அல்லது புரதத்தின் ஒரு பகுதி(யை) களைப் பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள்.

கட்டம் I & II – நோவாவாக்ஸ் நிறுவனம்

மே மாதத்தில், மேரிலாந்தை மையமாகக் கொண்ட நோவாவாக்ஸ் கொரோனா வைரஸ் புரதங்களின் பகுதி (யை) களைச் சுமந்து செல்லும் நேனோ பார்டிக்கிள் எனப்படும் நுண்ணிய துகள்களால் ஆன தடுப்பு மருந்து மீது கட்டம் I / II சோதனையைத் தொடங்கியது. தொற்றுநோய் தடுப்பு தயாரிப்புகளின் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி இந்த திட்டத்தில் $ 384 மில்லியன் முதலீடு செய்கிறது.

கட்டம் I –  க்ளோவர் பயோஃபார்மாசூட்டிகல்ஸ் & .எஸ்.கே

க்ளோவர் பயோஃபார்மாசூட்டிகல்ஸ் கொரோனா வைரஸ்களிலிருந்து ஒரு புரதத்தைக் கொண்ட தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் தூண்டுவதற்காக, பிரிட்டிஷ் மருந்து தயாரிப்பாளரான ஜி.எஸ்.கே தயாரித்த அட்ஜுவன்ட் என அழைக்கப்படும் நோயெதிர்ப்பு தூண்டியுடன் இந்த மருந்து எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யப்படும்.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

2002 ஆம் ஆண்டில் SARS தொற்றுநோய்க்குப் பிறகு, பேய்லர் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய உலகளாவிய தீவிரத தொற்றை தடுக்கக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினர். ஆரம்ப முடிவுகள் உறுதியளித்த போதிலும், SARS தொற்று நின்று போனதால், அது கைவிடப்பட்டது. ஆராய்ச்சிக்கான நிதி ஆதாரம் இல்லாததால், ஆதரவு மறைந்துவிட்டது. SARS மற்றும் கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்கள் மிகவும் ஒத்திருப்பதால், ஆராய்ச்சியாளர்கள் டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையுடன் இணைந்து இந்த திட்டத்தை புதுப்பித்து மீண்டும் துவங்கியுள்ளனர்.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வில் உள்ள அவர்களின் தடுப்பு மருந்து,  PittCoVacc – பிட்கோவாக் என அழைக்கப்படுகிறது, இது சர்க்கரையால் செய்யப்பட்ட 400 சிறிய ஊசிகளால் ஆன, தோல் மீது  இணைப்பாக அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  தோலில் வைக்கும்போது, ஊசிகள் கரைந்து வைரஸ் புரதங்களை உடலில் செலுத்துகின்றன.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து, வலுவான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற, மாற்றப்பட்ட வைரஸ் புரதங்களை வழங்குகிறது. ஜூன் மாதத்தில், பல்கலைக்கழகமும் சிஎஸ்எல் நிறுவனமும் முதலாம் கட்ட சோதனைகளைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இது 2021 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டோஸ்களை உற்பத்தி செய்யும் திட்டத்துடன் தயாரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. வழிவகுக்கும். ஜி.எஸ்.கே நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் தூண்டுவதற்கு ஒரு அட்ஜுவன்டையும் கொண்டுள்ளது.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

பிரெஞ்சு நிறுவனமான சனோஃபி மற்றும் ஜி.எஸ்.கே இணைந்து, பூச்சிகளின் செல்களுக்குள் வளரும் மாற்றம் செய்யப்பட்ட வைரஸ்களைப் பயன்படுத்தி வைரஸ் புரதங்களை உருவாக்கி, நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் அட்ஜுவன்டையும் சேர்த்து தடுப்பு மருந்தாக உருவாக்கியுள்ளனர். தடுப்பு மருந்து சோதனைகளில் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு குறைந்தது 600 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்று சனோஃபி கூறியுள்ளது.

மருத்துவமனை சோதனைகளுக்கு முந்தைய கட்டம் (PRECLINICAL)

வக்ஸார்ட்டின் தடுப்பு மருந்து என்பது வெவ்வேறு வைரஸ் புரதங்களைக் கொண்ட வாய்வழி மாத்திரையாகும். ஜூன் மாதத்தில், அமெரிக்க நிறுவனம் 2020 கோடையில், முதலாம் கட்ட சோதனைகள் மேற்கொள்ள தயாராகி வருவதாக அறிவித்தது.

முழு வைரஸ் தடுப்பு மருந்துகள்

நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு பலவீனமான அல்லது செயலிழக்கச் செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட கொரோனா வைரஸை பயன்படுத்தும் தடுப்பு மருந்துகள்.

கட்டம் I & II – சினோவாக் பயோடெக்

தனியார் சீன நிறுவனமான சினோவாக் பயோடெக் இரண்டாம் கட்ட சோதனைகளில் கொரோனாவாக் என்ற செயலற்ற தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகிறது, மேலும் ஆண்டுதோறும் 100 மில்லியன் டோஸ் வரை உற்பத்தி செய்யும் வசதியை உருவாக்கி வருகிறது.

கட்டம் I & II – சினோபார்ம்

செயலற்ற இரண்டு தடுப்பு மருந்து வைரஸ்கள் குறித்து அரசுக்கு சொந்தமான சீன நிறுவனமான சினோபார்ம் கட்டம் I / II சோதனைகளைத் தொடங்கியுள்ளது. பெய்ஜிங்கில் ஆண்டுக்கு 200 மில்லியன் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் வசதியை கட்டியுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

கட்டம் I

போலியோ மற்றும் ஹெபடைடிஸ் ஏ நோய்க்கான தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்த சீன மருத்துவ அகாடமியின் மருத்துவ உயிரியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கோவிட் -19 க்கு செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பு மருந்தின் முதல் கட்ட சோதனையை நடத்தி வருகின்றனர்.

மறுபயன்பாட்டு தடுப்பு மருந்துகள்

கோவிட் –19 க்கு எதிராக பயன்படுத்தக் கூடிய, பிற நோய்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள்.

கட்டம் III

பேசிலஸ் கால்மெட்-குயரின் தடுப்பு மருந்து 1900 களின் முற்பகுதியில் காசநோய்க்கு எதிரான பாதுகாப்பாக உருவாக்கப்பட்டது. இதை, கொரோனாவிற்கு பயன்படுத்த, ஆஸ்திரேலியாவில் உள்ள முர்டோக் குழந்தைகள் ஆராய்ச்சி நிறுவனம் மூன்றாம் கட்ட சோதனையை நடத்தி வருகிறது. மேலும் தடுப்பு மருந்து ஓரளவு கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கிறதா என்பதைப் பார்க்க இன்னும் பல சோதனைகள் இந்த மருந்தின் மீது நடந்து வருகின்றன.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து தடுப்பு மருந்துகளும், ஆய்வுகளில் இருந்தாலும், சிறந்த சோதனை முடிவுகளைக் காட்டி வருவதால், நமக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி விரைவாக வரும் என நம்புவோம்!!!

நன்றி: The New York Times, Newspaper

ஆங்கிலம்: The New York Times, Newspaper

தமிழில்: லயா