சிறப்புக்கட்டுரை: தமிழக அரசியலில் வெற்றிடமா?

கட்டுரையாளர்:  மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன்

மிழக அரசியல் நிலவரம் பற்றிக் குறிப்பிடுவதற்குக் கடந்த ஓராண்டுக்கு மேலாகப் பேச்சுகளிலும் எழுத்து களிலும் அடிக்கடி ஒரு சொல் பயன்படுத்தப்படுகிறது – “வெற்றிடம்” என்ற சொல்தான் அது. குறிப்பாக ஆளுங்கட்சியான அஇஅதிமுக-வின் தனிப்பெரும் ஆளுமையாக இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மர்ம மரணத்தைத் தழுவியதையும் (அரசாங்கமே அமைத்துள்ள நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழு அறிக்கை வரும் வரையில் நாமும் மர்ம மரணம் என்றுதான் கூற வேண்டியிருக்கிறது), பெரும் எதிர்க்கட்சியான திமுக-வின் தலைவரும் தமது பேச்சு வன்மையால் அனைவரையும் பேச வைத்தவருமான கலைஞர் உடல் நலிவுற்றுப் பேச்சை இழந்துள்ளதையும் தொடர்ந்து உருவாகியுள்ள சூழலைச் சித்தரிக்க அந்தச் சொல்தான் கையாளப்படுகிறது.

இன்னும் குறிப்பாக, திரைப்பட உலகிலிருந்து நடிகர் கமல்ஹாசன் இந்த தனது கட்சியை அறிவித்து அதன் முதல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்கவிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் கடையை ஏப்ரலில் திறக்கக்கூடும் என்ற நிலையில், எதிர்கால அரசியல் நுழைவுக்கு முன்னோட்டமாக விஜய் ஒரு இணையத்தளம் தொடங்கியுள்ள நிலையில், விஷால் தாமும் அரசியலில் ஈடுபடப்போவதாகக் கூறியுள்ள நிலையில் அந்த வெற்றிடத்தை தாங்கள் கைப்பற்றலாம் என்று இவர்கள் கருதுவதாகச் சித்தரிக்கப்படுகிறது. ஜெயலலிதா இருந்த வரையில், கலைஞர் ஆளுமையோடு செயல்பட்ட வரையில் இவர்கள் அவ்வப்போது சில பிரச்சனைகளில் கருத்துகளை வெளிப்படுத்தி வந்திருந்தாலும், இப்படி அரசியல் கட்சி தொடங்குகிற துணிவான முடிவை எடுக்காமல் இருந்தார்கள், இப்போது ஒரு வெற்றிடம் உருவாகி யிருப்பதால், மற்ற கட்சிகளின்பால் மக்களுக்கு ஒரு ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதால், தங்களுக்கான வாய்ப்பாக வசப்படுத்தத் துணிந்திருக்கிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆனால், தமிழகத்தில் உண்மையாகவே ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறதா? இந்தப் பேரண்டத்தி லேயே, எதுவுமே இல்லாத வெற்றிடம் என்று எங்கேயும் இல்லை என்பதே அறிவியல் உண்மை. பருப்பொருளா கவோ, கண்ணுக்குப் புலப்படாத அணுவாகவோ, விசையாகவோ ஏதோவொன்றால் எல்லா இடங்களும் நிரம்பியிருக்கின்றன. வெற்றிடத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக முன்பொரு செய்தி வந்தது.

வெற்றிடத்தில் உள்ள காந்தப்புலன்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதுதான் பாதுகாப்பான, இயற்கைச் சூழலுக்குக்குக் குந்தகம் ஏற்படுத்தாத மின்சார உற்பத்திக்கான தொழில்நுட்பமாக உருவெடுக்கப்போகிறது என்றும் அந்தச் செய்தி மேலும் கூறியது. அந்தச்செய்தியைத் தமிழாக்கம் செய்துகொடுத்தபோது அன்றைய ‘தீக்கதிர்’ ஆசிரியர் கே. முத்தையா, “நம் பிரபஞ்சத்தில் வெற்றிடம் என எதுவும் இல்லை என்பதற்கு இந்தச் செய்தி ஒரு சான்று,” என்று கூறினார்.

பின்னர் அதையே ஒரு கட்டுரையாக்கியபோது, ”காந்தப்புலன் என்ற ஒன்று அங்கே இருக்கிறது என்றால் அது எப்படி வெற்றிடமாகும்? எங்கும் நிறைந்த பொருளால் ஆனது இப்பேரண்டம்,” என்று எழுதினேன்.

இயற்கை அறிவியல் இதுதான் என்றால் செயற்கை அரசியல் மட்டும் எப்படி வெற்றிடத்தோடு இருக்க முடியும்? வரலாறு அப்படி வெற்றிடமாக இருக்க விட்டதில்லை. ஒரு மிகப்பெரிய ஆளுமையாகச் செல்வாக்குச் செலுத்திய ஒருவர் காலமாகிறபோது, அல்லது செயலிழக்கிறபோது இன்னொரு ஆளுமை தலைதூக்குகிற வரையில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்தச் சித்தரிப்பில், குறிப்பிட்ட ஆளுமையின் மீது கொண்ட மிகுந்த மரியாதை வெளிப்படுகிறது, அவருக்கு நிகராக அடுத்தது யார் என்ற உடனடி வினாவுக்கு விடை கிடைக்காத குழப்பமும் வெளிப்படுகிறது.

ஆனால் அடுத்தடுத்து தலைவர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி உருவாகிறவர்கள் சிந்தனையிலும் செயல்திறனிலும் முந்தைய தலைவர்களுக்கு நிகரான வர்களாக இல்லாமல் போகலாம். ஒருவேளை அவர்களைக் காட்டிலும் கூடுதலாகச் சிந்தனைக் கூர்மையும் செயல்பாட்டு ஆளுமையும் கொண்டவர்களாகக் கூட உருவெடுக்கலாம். பின்னர் அவர்கள் காலமாகிறபோது அல்லது அவர்களின் ஆளுமை மங்குகிறபோது, அவர்களுக்குப் பின்னால் யார் என்ற கேள்வியோடு, புதிய வெற்றிடம் உருவாகியிருப்பதாகப் பேசப்படும். வரலாறு நெடுகிலும் இப்படித்தான் எல்லாப் பகுதிகளிலும் நடந்து வந்திருக்கிறது.

தமிழக அரசியலும் இந்த அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகிவிட முடியாது. தமிழக அரசியல் ஒருபோதும் வெற்றிடமாக இருந்ததில்லை. எடுத்துக்காட்டாக, பெரியார் மறைவுக்குப் பின், பகுத்தறிவு, பெண்ணுரிமை, சுயமரியாதை, சமூகநீதி ஆகிய தளங்களை முன்னெடுக்கிறவர்கள் இல்லாமல் போய்விடவில்லை. தமிழகத்தில் மட்டுமல்லா மல், இந்தியத் துணைக்கண்டத்திலேயே இந்தத் தளங்களுக்கான ஒரு உருவமாக பெரியார் விளங்கினார். அப்படிப்பட்ட தனித்துவ அடையாளத்தோடு, தானே ஒரு இயக்கமாக யாரும் பரிணமிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாமேயன்றி தொடர்ந்து இந்தத் தளங்களை முன்வைத்துச் செயல்படுகிற தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமல் போய்விடவில்லை.

காமராஜருக்குப் பிறகு, மக்களின் தலைவர் என்று அடையாளப்ப டுத்தக்கூடிய வர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் போனது உண்மைதான், ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர்களே இல்லாமல் போய்விடவில்லை. மாநிலத் தலைவராகக் கட்சியின் மேலிடத்தலைமை யாரை நியமித்தாலும் அவரோடு முரண்பட்டு, என்னைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று ஒத்துழைக்காமல் இருப்பார்களே தவிர, சுவரொட்டிப் படங்களில் கூட அந்தத் தலைவரின் முகம் வராமல் பார்த்துக்கொள்வார்களே தவிர அந்தக் கட்சியைவிட்டுப் போய்விட மாட்டார்கள். ஆக, காமராஜருக்குப் பிறகு தமிழகக் காங்கிரஸ் தலைமை இப்படிப்பட்டவர்களிடம் சிக்கியிருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாமேயன்றி, வெற்றிடமாகிவிட்டது என்று சொல்வதற்கில்லை.

அண்ணாவுக்குப் பிறகு வெற்றிடம் என்றார்கள். கலைஞர் தனது ஆளுமையைத் தனித்துவத்தோடு நிலைநாட்டவில்லையா? கலைஞ ருடைய அரசியல் நிலைப்பாடுகளில் உடன்படலாம், முரண்படலாம், ஆனால் அவருடைய ஆளுமையை மறுப்பதற்கில்லை. கலைஞரைத் தொடர்ந்து அந்த அரசியல் கூர்மை, திராவிட இயக்கச் சித்தாந்தப் பார்வை ஆகியவற்றோடு முன்னால் நிற்பதில் மு.க. ஸ்டாலின் எப்படிச் செயல்படப்போகிறார்? இத்தனை நாட்கள் ஒரு போதாமை இருந்தது, தற்போது காவிரி தீர்ப்பு பிரச்சனையில் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அறிவித்து, அதற்கு அதிமுகவையும் அழைக்கப்போவதாகச் சொல்லி, பின்னர் மாநில அரசே அப்படியொரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வைத்ததில் ஒரு அரசியல் உத்தி வெளிப்படுகிறது என்று திமுக அன்பர்களும் விமர்சகர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை பிப்ரவரி 17 அன்று சென்னையில் நடத்திய சமூகநீதி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவுரையாற்றிய ஸ்டாலினிடமிருந்து சித்தாந்த அடிப்படையில் ஆழமான வெளிப்பாடு களை எதிர்பார்த்தவர்களுக்கு மனநிறைவு கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. இந்தப் போதாமை தொடருமா அல்லது பலமடங்காக ஈடுகட்டப்படுமா என்பதை அவரது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளிலிருந்தே மதிப்பிட முடியும். வெற்றிடமாக இராது என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

இடதுசாரி இயக்கம் தொடர்பாகவும் இந்த வெற்றிடப் பேச்சு அவ்வப்போது எழுந்ததுண்டு. ஜீவா, பீ.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர்களைத் தொடர்ந்து வந்த தலைவர்கள் அந்த இடங்களைப் பிடிக்க முடியவில்லை என்று சொல்வார்கள். வரலாற்றில் தனி மனிதப் பங்களிப்புக்கு ஒரு முக்கிய இடமிருக்கிறது என்றாலும் இயக்கச் செயல்பாடு என்பது கூட்டுத் தலைமை, கூட்டு முடிவு என்ற அடிப்படையில் செயல்படுகிறவர்கள் மார்க்சியர்கள். ஆகவே அவர்களைப் பொறுத்தவரை யில் வெற்றிடம் என்ற சொல்லை ஏற்கமாட்டார்கள். அதேவேளையில், தியாகங்களின் அடர்த்தியோ நேர்மையின் வலிமையோ இல்லாதவர்கள் கூட திடுதிப்பெனப் புகுந்து மக்களைக் கூறுபோட முடிகிறபோது, பொதுவுடைமை இயக்கம் பின்தங்கியிருப்பது ஏன் என்ற வினாவுக்கு மனச்சான்றோடு விடை காணும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டாக வேண்டும், ஈடுபடுவார்கள்.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் பெரிய ஆளுமை செலுத்திய தலைவர் என இதற்கு முன் யாரும் இருந்ததில்லை. ஆகவே அவருக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் இதுவரை எழவில்லை. ஆர்எஸ்எஸ் தலைமை பீடத்தால் இயக்கப்படும் அந்தக் கட்சியில், ஆர்எஸ்எஸ் நிறுவ விரும்புகிற பிராமணிய ஆதிக்கத்துக்காகவே செயல்படுகிறது என்ற தோற்றத்தை மறைக்க, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் கள் கட்சியின் மாநிலத் தலைவர், மத்திய அமைச்சர் என்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் தமிழ கத்தில் அக்கட்சி எடுத்துக்கொள்கிற பிரச்சனைகள் அல்லது விளம்பரத்துக்கான மலிவான வழியாக ஏற்படுத்துகிற சர்ச்சைகள் பிராமணியக் கண்ணோட்டத்துடனேயே இருக்கின்றன. ஆக அங்கேயும் வெற்றிடம் இல்லை, விபரீத இடமே இருக்கிறது.

இனவாதம் பேசி சாதியப் பாகுபாட்டு உண்மைகளை மறைக் கிறவர்கள், சாதிய ஆதிக்க மனநிலைகளைக் கிளறிவிட்டு மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களைத் வாய்க்கால் மாற்று கிறவர்கள், ஒரு ஜல்லிக்கட்டு உரிமைப் பிரச்சனையில் தமிழகம் முழுக்க இளையோர் படையைத் திரட்டிவிட்டு மக்களை வாட்டும் இதர முக்கியமான அரசியல்/சமூகப் பிரச்சனைகளில் முன்னால் வந்து நிற்க மறுப்பவர்கள்… என்று பலரையும் இந்த விவாதத்திற்குள் கொண்டுவரலாம். அவர்களும் இடத்தைக் குழப்பமாக வைத்திருக்கிறார்களேயல்லாமல் வெற்றிடமாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை.

எஞ்சியிருப்பது மாநில ஆளுங்கட்சிதான். ஜெயலலிதா இருந்த வரையில் நிமிர்ந்தே பார்க்க முடியாதவர்களாக இருந்தவர்கள்,  சுயநல நோக்கங்களுக்காக அப்படி இருக்க ஒப்புக்கொண்டவர்கள் இப்போது பேசுகிறார்கள், பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. உடைந்து ஒட்டப்பட்ட கட்சியோ, உடைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டி ருக்கிறவரின் சவாலோ எல்லாமே அந்தச் சுயநலம், மக்களின் பணத்தை முடிந்த அளவு சுருட்டுவதற்கான அதிகார வேட்கை ஆகியவற்றைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கின்றன. மக்களைச் சந்தித்தாக வேண்டிய பெரியதொரு தேர்தல் களத்தில் இறங்குகிற நிலை ஏற்படும்போது, ஆர்.நகர். தொகுதி காட்டியுள்ள நிலவரம் பற்றிய புரிதலோடு, முன்பு ஜெயலலிதா என்ற சுவரின் பலத்தில் வந்ததுபோல, மறுபடியும் அதிகார எல்லைக்குள் வர முடியாது என்ற அச்சமும் பதற்றமும் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அணிகளை இணைத்தது பிரதமர்தான் என்று துணை முதலமைச்சர் சொல்வதிலும், அதெல்லாம் இல்லை என்று முதலமைச்சர் மறுப்பதிலும் அந்த அச்சமும் பதற்றமும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன. மாநில உரிமை களுக்கான குரலைக்கூட உரக்க ஒலிக்க மறுக்கிற சரணாகதியில் வெளிப்படுகின்றன.

வேறு எந்த மாநிலத்திலும் வாய்க்காத வகையில், தமிழகத்தில் ஆட்சி நாற்காலியில் இருப்பவர்களை ஆட்டுவிக்க முடியும் என்ற அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது பாஜக. அதேவேளையில், தமிழக ஆட்சி பற்றி, இங்கே அமைதி குலைந்துவிட்டதாக, ஊழல் மலிந்துவிட்டதாகவெல்லாம் பேசாவிட்டால், மக்களால் மறுபடியும் ‘நோட்டா’ பொத்தானுக்கு மிகமிகக் கீழே தள்ளப்பட்டுவிடலாம் என்ற அச்சம் வேறு!

ஆக, எப்படிப்பட்ட சக்திகளின் பிடியில் அரசும் மாநிலக் களமும் சிக்கியிருக்கின்றன என்ற கோணத்தில்தான் தமிழக அரசியலைப் பார்க்க வேண்டும். வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்ற கோணத்தில் பார்த்தால் ஒருபோதும் உண்மை கண்ணில் படாது, அந்த சக்திகளின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கான பாதையும் புலப்படாது.