காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் பாசுரம் பாடுவதில் வடகலை-தென்கலை பிரிவினரிடையே மோதல் வெடித்தது.


காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

இந்நிலையில், காஞ்சீபுரம் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள மண்டபத்தில் வேடுபறி வைபவம் நடந்தது.

அப்போது அங்கு தென்கலை பிரிவினர் திருமங்கையாழ்வார் பாசுரம் பாட முயன்றனர்.
அதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.  போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

வடகலை மற்றும் தென்கலை இடையே 18 வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வடகலை வைணவர்கள் திருமாலையும் லட்சுமி தேவியையும் சரிசமமான பூஜைக்கு உரியவர்களாக கருதுபவர்கள்.

அதிக வடமொழி கலாச்சாரம் இருக்கும். தென்கலை வைணவர்களும் லட்சுமி தேவியை வணங்குவார்கள். ஆனால் திருமாலை மட்டுமே மூல தெய்வமாக வழிபடும் கொள்கையுடையோர்.
ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு முக்கியத்துவம் தருவோர். திவ்யபிரபந்தம் தென்கலை வைணவர்களுக்கு வேதவாக்கு.

இரு தரப்புக்கும் இருக்கும் இந்த வேறுபாடுகள் தான் அடிக்கடி மோதல் ஏற்பட காரணமாக இருக்கிறது.