சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்கள், செவிலியர்களும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து,  கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.
சென்னையில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,689க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு வாங்கி உள்ளது. இருந்தாலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட பல தரப்பினரும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைஅளித்து வருகின்றனர்.
கொரோனா தடுப்பு பணிகளில் பல தனியார் மருத்துவமனைகளும் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சில மருத்துவர்கள், செவிலியர்கள் உடல்நலம் பாதிப்புக்குளாகினர். இதையடுத்து, அந்த மருத்துவ மனையில் பணியாற்றும் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அங்கு பணிபுரிந்து வந்த சில  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை அந்த தனியார் மருத்துவமனை, நகராட்சி அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.