எளிமையாக நடத்தப்பட்ட நடிகர் வடிவேலுவின் மகள் திருமணம்!!!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் இளைய மகள் திருமணத்திற்கு கோலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமல் எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக திருமணம் நடந்து முடிந்தது.

marriage

நடிகர் வடிவேலு திரையுலகில் தனது அபார நகைச்சுவை நடிப்பினால் முத்திரை பதித்தவர். இவரை சமூகதளத்தின் நாயகன் என்று கூட கூறலாம். இவர் இல்லாமல் எந்த மீம்ஸ்களும் நிறைவு பெறுவதில்லை. நகைச்சுவை வசனங்களை பேசுவதில் இருவருக்கு நிகர் இவர்தான். சினிமாவில் எத்தனை உயரத்திற்கு வந்தாலும், தனது வீட்டில் நடக்கும் எந்த விசேங்களுக்கும் திரையுலகை சார்ந்தவர்களை இவர் அழைத்ததில்லை.

நடிகர் வடிவேலுவுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஏற்கனவே, 2 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகளும், எம்பிஏ பட்டதாரியுமான கலைவாணிக்கு சென்னையில் வசிக்கும் பொறியாளர் ராமலிங்கம் (எ) ராம்குமாருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் மதுரையில் உள்ள ஐராவத நல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராமலிங்கம்.

இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது. மணமக்கள் வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை. இந்த திருமணத்தில் திமுக தலைமை நிலையச் செயலாளரும் வடிவேலுவின் நெருங்கிய நண்பருமான நடிகர் பூச்சி முருகன் பங்கேற்றார். வடிவேலுவின் மகன் மற்றும் 2 மகள்களின் திருமணமும் இதேபோல் எளிமையாக நடந்தது. திருமணத்தில் செய்தியாளர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை.