சென்னை:  திரைப்படத்துறையில், வாய்ப்பு இல்லாமல் ஒதுக்கப்படும் நடிகர், நடிகைகள் அரசியல் கட்சிகளில் சேருவதையும், புதியதாக அரசியல் கட்சிகளை தொடங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதன்படி, சமீபத்தில் திரைப்பட நடிகை குஷ்பு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட நிலையில், தற்போது காமெடி நடிகர் வடிவேலும் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்தஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. வர இருக்கும் தேர்தலில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று நோக்கத்தில், தமிழக பாஜகவினர், மாற்று கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு வலைவீசி வருகின்றனர். அதன்படி, திமுகவில் இருந்து சில தலைவர்கள் பாஜகவில் இணைந்தது. மேலும் அதிமுக உள்பட மற்ற கட்சிகளிலும் இருந்து சில நபர்களை இழுக்க திட்டமிட்டு, குட்டையை குழப்பி வருகிறது.

ஏற்கனவே திரையுலகைச் சேர்ந்த  கங்கைஅமரன், கஸ்தூரி, ராதாரவி, கவுதமி, நமீதா, விஜயகுமார், காய்த்ரி ரகுராம், பேரரசு, எஸ்.வி சேகர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் என பலரை  பாஜகவில் இணைத்துள்ள நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நடிகை குஷ்புவை தனது கட்சிக்கு இழுத்தது. இதையடுத்து வைகைப் புயல் எனப்படும் சிரிப்பு நடிகர் வடிவேலுக்கு வலைவீசப்பட்டு உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுகவில் இணைந்து,  திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிய வடிவேலு, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பெரும் வரவேற்பை பெற்றார்.  திருவாரூரில் கலைஞர் முன்னிலையில் விஜயகாந்தை தாக்கி அவர் பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது விசில் பறந்ததாக கூறப்பட்டது. . ஆனால் அடுத்தடுத்த ஊர்களில் அவர் பிரச்சாரம் செய்த விதம், மக்களை நகரவிடாமல் கட்டிப்போட்டது. மக்களிடையே அவ்வளவு செல்வாக்கு பெற்ற வடிவேலு, தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில்,  அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா 4வது முறை யாக முதல்வரானதும், வடிவேலுவின் சாம்ராஜ்யம் முற்றிலுமாக உருக்குலைந்தது. அரசியலிலும், திரையுலகிலும் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

பின்னர் திமுகவில் இருந்து விலகி, ஒருசில படங்களில் நடித்து வந்தாலும், அவரது பருப்பு வேகவில்லை. இதனால், தற்போது ஓய்வாக இருந்தும், சிலபல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார்.

இந்த நிலையில், தமிழக பாஜகவில் இழுக்க வடிவேலுவிடம் பேச்சவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  விரைவில், வடிவேலு பாஜகவில் இணையும் செய்தி, பிளாஷ் செய்தியாகவரலாம் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.