நிரம்பும் வைகை அணை: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை:

வைகை அணை நிரம்பி வருவதால், தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட  5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாவும்,  கடந்த சில நாட்களாக வைகை அணைக்கு தண்ணீர் வரும் நீர்பிடிப்பு பகுதிகளில்  கன மழை கொட்டி வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வைகை அணையில் தேக்கப்படுகிறது

ஏற்கனவே கடந்த ஆண்டு வைகை அணை தனது  முழு கொள் அளவான 71 அடியை எட்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டி உள்ளது.

இதன காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட  ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அணையின் நீர்மட்டம், 66 அடியை எட்டியதும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68 அடியை தொட்டதும் 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடி ஆனதும் 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உபரி நீர் அப்படியே திறந்து விடப்படும்.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 66.01 அடியாக இருந்தது. எனவே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணைக்கு 2,510 கன அடி நீர் வருகிறது. பாசனத்துக்காக 1,460 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.