சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்த வைகோ, “முரசொலி பவள விழாவில் கலந்துகொள்வேன்” என்று அறிவித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “29 ஆண்டுகள் கருணாநிதியின் நிழலாக இருந்தேன்… ஒரு துரும்புகூட அவர் மீது படாமல் பார்த்துக்கொண்டேன். நான் ஈழத்துக்குச் சென்ற போது, என் தம்பியை பறிகொடுத்து தவிக்கிறேன் என்று நெகிழ்வுடன் தெரிவித்திருந்தார் கருணாநிதி. என் மனதின் அடியாளத்தில் அவர் இருக்கிறார்.

அவர் என்னை வளர்த்தவர். அந்த நன்றியை மறக்கமாட்டேன். 99ம் ஆண்டு இதே வீட்டுக்கு வந்தபோது, னிக்குடித்தனம் சென்ற மகன் சொந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன் என்றேன். கருணாநிதையால் பேச முடியவில்லை. பேச முயற்சித்தார்.

கண்கள் கலங்கின. சென்று வருகிறேன் என்றவுடன் சிரித்தார். அந்த சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கின்றன.

அந்த கண்ணீர்த்துளியில் ஆயிரம் செய்திகள் இருக்கின்றன. கருணாநிதி விரைவில் முழு நலம் அடைவார். நிச்சயம் பேசுவார். அந்த காந்த குரல், திராவிட இயக்கத்தின் குரல் மீண்டும் ஒலிக்கும். முரசொலி பவள விழாவுக்கு வரச் சொல்லி ஸ்டாலின் அழைத்தார்.நானும் ஒப்புக்கொண்டேன்.

இதை கருணாநிதியிடம் கூறியவுடன் மகிழ்ந்து புன்சிரித்தார்” என்று வைகோ தெரிவித்தார்.