ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பசுமை தீர்பாபாயத்தில் வைகோ வைத்த முழு வாதம்

தூத்துக்குடி ஸ்டைர்லட் ஆலை குறித்து நேற்று தேசிய பசுமை் தீர்ப்பாயத்தில் வழக்கு நடந்தது. அதில் வைகோ தானும் ஒரு மனுதாரர் என்றும் வாதாட அனுமதி வேண்டும் என்றும் கோரினார். ஆனால் தலைமை நீதிபதி கோயல் வைகோ வாதாட அனுமதி மறுத்தார்.

இதனால் ஆவேசமடைந்த வைகோ, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தான் பல ஆண்டுகளாக நடத்தி வரும் சட்டப்போராட்டங்கள் பற்றியும், மக்கள் திரள் போராட்டங்கள் பற்றியும் விவரி்த்தார். மேலும் தான் பல ஆண்டுகாலத்துக்கு முன்பே வழக்கறிஞராக பதிவு செய்திருப்பதையும் முக்கிய வழக்குகளில் ஆஜராகியிருப்பதையும் குறிப்பிட்டார்.

மேலும், “மூன்தீர்மானத்துடன் தீர்ப்பளிக்க வந்திருக்கிறீர்கள். என்னை வாதாடக்கூடாது என்று கூற உங்களுக்கு அதிகாரமில்லை. என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்ப்டால் உச்ச நீதிமன்றத்தில் சந்தக்கிறேன்” என்றார்.

இதையடுத்து வைகோவை வாதாட நீதிபதி கோயல் அனுமதி அளித்தார்.

பிறகு வைகோ மன்வைத்த வாதம் வருமாறு:

“ஸ்டெர்லைட் ஆலையை, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரியில் விவசாயிகள் உடைத்து நொறுக்கினார்களே, மாநில அரசு உரிமத்தை இரத்து செய்ததே, அதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏன் உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ வழக்குத் தொடுக்கவில்லை?

கோவா அரசு நுழையாதே என்றது. குஜராத்அரசு இங்கே வராதே என்றது. தமிழ்நாட்டில் அன்றைய அண்ணா தி.மு.க. அரசில் அனுமதி வாங்கி, ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் எங்கள் தலையில் கல்லைப் போட்டது. நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. இந்தியாவிலேயே பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து முதலில் வாள் உயர்த்தியவர்கள் எங்கள் தென்னாட்டு வீரர்கள்.

மக்கள் மன்றத்தில் போராடி விட்டு, நீதிமன்றத்திற்கு நான் சென்றேன். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைத்தது. உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 2013 ஏப்ரல் 2 இல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை வாசித்தவுடன், நீதிபதிகளைப் பார்த்து, நீதி கிடைக்கும் என்று கதவைத் தட்டினேன்; நீதி கிடைக்கவில்லை என்றேன்.

உடனே நீதிபதி பட்நாயக் என்னைப் பார்த்து, நீங்கள் பொதுநலனுக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் போராடுகின்றீர்கள். பாராட்டுகின்றேன். தொடர்ந்து போராடுங்கள் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர அடர்த்தியில் இருந்து தாமிரத்தைத் தயாரிக்கும் உலையின் உயரம் 60 மீட்டர்கள்தான் இருக்கின்றது. ஒரு நாளைக்கு 391 டன் உற்பத்தி ஆகும்போது அந்த உயரம் சரிதான். ஆனால், இப்பொழுது ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரம் உற்பத்தி செய்கின்றார்கள். 1200 டன் தாமிர அடர்த்தி அதில் போடப்படுகின்றது.

1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி ஒரு பார்முலா இருக்கின்றது. அந்த விதிகளை முழுமையாக இதோ வாசிக்கின்றேன். அந்தக் கணக்குப்படி புகைபோக்கியின் உயரம்  99.6 மீட்டர் இருக்க வேண்டும்.

இதனால் வெளியாகின்ற நச்சு வாயுக்கள் உயரம் குறைவாக இருப்பதால் மக்கள் உயிருக்கு எமனாக ஆகின்றது.

என் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர் தருண் அகர்வால், தற்போதுள்ள சிம்னி உயரத்திற்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும். அல்லது உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம், அங்கே பல புகைபோக்கிகள் இருக்கின்றன. தாமிர அடர்த்தி போடுகின்ற இடத்திலும் இரண்டு புகை போக்கிகள் இருக்கின்றன என்று அப்பட்டமான பொய்யைச் சொன்னார். நீதிபதி அவர்களே, உங்கள் அமர்வில் இருக்கின்ற இரண்டு நிபுணர்களுள் ஒருவரைத் தூத்துக்குடிக்கு அனுப்புங்கள். நேரடியாக அவர் பார்க்கட்டும். தாமிர அடர்த்தியைப் பயன்படுத்தும் உலையில் ஒரு புகைபோக்கிதான் இருக்கின்றது. ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் அதன் வக்கீலுக்கும் நான் சவால் விடுகிறேன். இத்தனை ஆண்டுகள் நச்சு வாயுவை வெளியேற்றி, பொதுமக்கள் உடல்நலனுக்குக் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.

இன்று நான் உங்களிடம் தாக்கல் செய்த கோப்பில், 14 ஆம் பக்கத்தில் உள்ள அட்டவணையைப் பாருங்கள். உலகத்தில் உள்ள பல்வேறு தாமிர ஆலைகளில்  புகை போக்கியின் உயரம் 100 மீட்டர்களுக்கும் அதிகமாகவே உள்ளது. விநோதம் என்ன என்றால், ஸ்டெர்லைட் நிர்வாகம் இரண்டாவதாக ஒரு ஆலையை அங்கே நிறுவத் திட்டமிட்டு இருக்கின்றதே, அதன் புகைபோக்கி உயரம் 165 மீட்டர் என்று அவர்களே குறித்து உள்ளார்கள். இப்போது இயங்குகின்ற ஆலையின் புகைபோக்கியை உடனே மாற்ற முடியாது. ஆண்டுக்கணக்கில் ஆகும். பெரும்பொருள் செலவு ஆகும்.

அமெரிக்காவில் அசார்கோ என்ற தாமிர உற்பத்தி ஆலை, 100 ஆண்டுக்கால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பின் மூடப்பட்டது. 30 ஆண்டுகள் ஆகியும் சுற்றிலும் உள்ள நிலங்களை இன்னமும் சீர்திருத்த முடியவில்லை.

மே 22 ஆம் தேதி போராட்டத்தில்,வெளி மாநிலங்களில் இருந்து குண்டர்களும், நக்சல்பாரிகளும் வந்தார்கள் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் கூறினார். இது அப்பட்டமான பொய். வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள் எனப் பொதுமக்கள் இலட்சம் பேருக்கு மேல் திரண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்றனர். அவர் திட்டமிட்டே துப்பாக்கிச் சூட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

ஸ்டெர்லைட்டை எதிர்த்துக் குரல் கொடுக்க வந்த ஸ்னோலின் என்ற 11 வயது மாணவி, வாய்க்குள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து கோரமாகக் கொல்லப்பட்டார். திரேஸ்புரத்தில் ஒரு மீனவச் சகோதரி, தன் பிள்ளைக்குச் சோறு கொண்டு போகும்போது, பத்தடி தொலைவில் இருந்து காவல்துறை சுட்டதில், தலைக்குள் குண்டு பாய்ந்து மூளை சிதறித் தரையில் விழுந்தது. 13 பேரும் குறிபார்த்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தமிழக அரசின் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு இது.

இந்தத் தீர்ப்பு ஆயத்தில் இதுகுறித்து விசாரிப்பதற்கு இடம் இல்லை என்றாலும், நடந்த உண்மையை உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி திபேன், சுற்றுச்சூழலுக்காக உலக நாடுகளின் விருதுகளை வாங்கியவர். முன்னாள் நீதிபதிகளையும், முன்னாள் காவல்துறை அதிகாரிகளையும் கொண்ட, உண்மை அறியும் குழுவை அழைத்துச் சென்று, தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, பொதுமக்களை நேரில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை நடக்கின்றது.

இந்தியாவுக்கே வருமானம் போய் விட்டது. தாமிரம் இறக்குமதி செய்கிறோம் என்று ஸ்டெர்லைட் வழக்கறிஞர் மிகவும்  ஆதங்கப்பட்டார். இந்தியாவின் வருமானத்திற்காக நாங்கள் சாக வேண்டுமா? மும்தாஜ் மகால் என்ற ஒரு பெண்ணின் கல்லறைதான் தாஜ்மகல். உலக அதிசயங்களுள் ஒன்று. அந்தத் தாஜ்மகல் மாசுபடாமல் பாதுகாக்க, யமுனைக்கரையில் கோடிக்கணக்கான வருமானம் ஈட்டிக்கொண்டு இருந்த பல தொழிற்சாலைகளை உச்சநீதிமன்றம் மூடி விட்டதே?

கோயல்

ஸ்டெர்லைட் ஆலையை 99.9 விழுக்காடு மக்கள் எதிர்க்கின்றார்கள். இதில் வேதனை தரும் செய்தி என்ன என்றால், தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே இவ்வளவு காலமும் செயல்பட்டார்கள். அதனால்தான், ஸ்டெர்லைட் வழக்கறிஞர் பலமாக வாதாடுகிறார். 44 மாதங்கள் ஆலையை ஓட்டுகின்ற அனுமதி இல்லாமலேயே ஆலையை இயக்கினார்கள் என்று நான் உச்சநீதிமன்றத்தில் கூறினேன்.

உண்மைகளை மறைப்பதும்,  தவறான தகவல்கள் தருவதும் ஸ்டெர்லைட்டின் வழக்கம் என்று, உச்சநீதிமன்றமே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை  நிரந்தரமாக மூடுவது ஒன்றுதான், தூத்துக்குடி மாநகர மற்றும் சுற்று வட்டார மக்களைப் பாதுகாக்கும்” என்று வைகோ வாதாடினார்.

பிறகு நீதிபதி கோயல், இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று வழக்கை  ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு விசாரணையில், வைகோவுடன் ம.தி.மு.க. சட்டத்துறைத் துணைச்செயலாளர் ஆசைத்தம்பி பங்கேற்றார்.