கைது செய்யப்பட்ட பத்திரிகையாளற் நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற வைகோ, தர்ணாவில் ஈடுபட்டதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்த மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபால் காவல் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின்படி கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக ;தகவல் வெளியாகி இருக்கிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு  அழைத்துச் செல்லப்பட்டார். அவரிடம் காவலர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அவரைப் பார்ப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிந்தாதிரிபேட்டை காவல் துணை ஆணையர் அலுவகத்துக்கு சென்றார். அங்கு கூடியிருந்த காவலர்களை  அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. தான் வழக்கறிஞர் என்றும் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தினார்.

ஆனாலும் காவலர்கள் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் தன்னை அனுமதிக்கும்படி கோரி, தரையில் அமர்ந்து வைகோ தர்ணா செய்தார்.

தகவல் அறிந்து மதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். அவர்களும் தரையில் அமர்ந்து வைகோவுக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து வைகோவை காவல்துறையினர் கைது செய்தனர்.