Random image

தமிழக அரசைக் கண்டித்து அறிக்கையாவது விடுவாரா வைகோ?

நெட்டிசன்:

(வாட்ஸ்அப் பதிவு)

பொதுவாகவே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் தி.மு.க.வுக்கு எதிராகவும் குரல்கொடுத்து வருகிறார் என்ற கருத்து நிலவி வருகிறது.

சமீபத்தில் நாகர்கோயிலில் நடந்த திருமணம் ஒன்றில் பேசிய வைகோ, “தி.மு.க. – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே மணல் கொள்ளைில் ஈடுபடுகின்றன என்று விமர்சிப்பவன்தான் நான். இரு கட்சிகளையும் ஒரே மாதிரித்தான் பார்க்கிறேன்” என்றார்.

ஆனால் அவர் சொல்வதைத்தான் நம்ப ஆள் இல்லை.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போது எழுந்த அமளிகுறித்து பேசி வரும் வைகோ, “இது திமுகவின் திட்டமிட்ட சதி” என்று கடுமையாக விமர்சித்தார். அதோடு, “அன்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபையில் அமைதியாக அமர்ந்திருந்தனர்” என்று “கான்டக்ட் சர்ட்டிபிகேட்”டும் கொடுத்தார்.  அதே நேரம், அக் கட்சி எம்.எல்.ஏக்கள், கூவத்தூர் நட்சத்திர ஓட்டிலில் தங்கவைக்கப்பட்டது குறித்து கருத்து ஏதும் சொல்லவில்லை.

இந்த நிலையில், ஆச்சரியகரமாக, அ.தி.மு.க. அரசின் செயல்பாட்டை லேசாக குறை சொல்லி தீர்மானம் போட்டிருக்கிறது வைகோவின் ம.தி.மு.க. பொதுக்குழு.

நேற்று கோவையில் நடந்த அக் கட்சியின் பொதுக்குழுவில், இரண்டாவது தீர்மானத்தில், “தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பற்றிப் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால்  நீர்வளம், நிலவளம் அழிந்து சுற்றுச் சூழல் வெகுவாகக் கெடுகின்றது.

எனவே, அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 08.08.2015 அன்று கழகப் பொதுச்செய லாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதினார். தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், செப்டம்பர் 9, 2015 இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வைகோ ரிட் மனு தாக்கல் செய்து, சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து ஒன்றரை ஆண்டுக்காலம் பல்வேறு அமர்வுகளில் தமது கோரிக்கையை வலியுறுத்தி வந்தார்.

2017 ஜனவரி 10 ஆம் தேதியன்று மாண்பமை நிதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணை யில், தமிழகத்தின் 13 தென் மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவையும் அமைத்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற ஆணை பிறப்பிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிப்ரவரி 10, 2017 இல் அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்குத் தாக்கீது அனுப்பி உள்ளது.

தமிழகத்தின் நிலவளம், நீர்வளம், மற்றும் சுற்றுச் சூழலைக் காக்கின்ற வகையில், தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்காக, நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றது” என்கிறது அந்தத் தீர்மானம்.

ஆபத்தான சீமக்கருவேல மரத்தை அகற்ற 08.08.2015  அன்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு மனு கொடுத்திருக்கிறார் வைகோ.  அதாதவது ஜெயலலிதாவின் ஆட்சியில். ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் செயல்பட்டதாகச் சொல்லப்படும அந்த காலகட்டத்திலேயே வைகோவின் மிக முக்கிய பொது நலக் கோரிக்கையை அவர் கண்டுகொள்ளவில்லை.  அவருக்குப் பிறகு அதே கட்சி வென்று மீண்டும் ஜெயலலிதா முதல்வர் ஆனார், அவருக்குப் பிறகு அதே கட்சியில் இருந்து இரண்டாவது முதல்வர் வந்துவிட்டார். இப்போதும் அதே நிலைதான்.

சீமக்கருவேல மரத்தின் ஆபத்தை உணர்ந்து தானே கேஸ் கட்டைத் தூக்கி நீதிமன்றத்தில் வாதாடி அதற்காக தீர்ப்பும் பெற்றுவிட்டார் வைகோ. அப்படியும் அதிமுக அரசு இதில் கவனம் எடுக்கவில்லை. ஆகவே தானே அரிவாள் தூக்கி வெட்ட ஆரம்பித்துவிட்டார். அதோடு, தன்னுடன் கருவேல மரங்களை வெட்ட இளைஞர்கள் வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.

“நாட்டை நாசமாக்கும் கருவேல மரத்தை வெட்டுவதில் தமிழக அரசு மெத்தனப்போக்கைக் கடைபிடிக்கிறது. இதைக் கண்டிக்கிறோம்” என்று ஒரு போராட்டம்..  அவ்வளவு ஏன், ஒரு அறிக்கைகூட வைகோ விடவில்லையே… ஏன்?

அப்புறம்..

தலைவர் வைகோ தொடர்ந்த வழக்கில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..

கலிங்கப்பட்டி மதுபானக் கடையை மூட உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்து தமிழக அரசின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது..டெல்லி உச்சநீதிமன்றம்…