ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், தண்ணீர் பற்றாக்குறை பற்றி முதல்வர் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான பின்னர், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ”ஸ்டெர்லைட் வழக்கு 27-ம்தேதி முதல் தொடர்ந்து விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ரிட் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான ஆவணங்களை 26-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனது மனு உள்பட 5  பேரின் இம்பிளிட் மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 276 ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் சஹாரா பாலைவனம் போல் மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து விழுப்புரத்திலிருந்து ராமநாதபுரம் வரை 23-ம் தேதி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற உள்ளது. நான் மரக்காணத்தில் பங்கேற்க இருக்கிறேன்.

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னர் பீடில் வாசித்தது போல் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் பழனிசாமி அறிக்கைகளை மட்டும்  விட்டுக்கொண்டிருக்கிறார். மழை பெய்த காலங்களில் அரசு முன்னெச்சரிக்கையாகச் செயல்படாமல் மழை நீரை ச் சேகரிக்கத் தவறிவிட்டது. தற்போதைய அரசின் நடவடிக்கை வெந்த பூண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. சென்னையில் குடிக்க நீர் இல்லாத சூழலுக்கு இந்த அரசு தான் காரணம்.

ஹைட்ரோ கார்பன் எடுக்க லைசென்ஸ் கொடுக்கப்பட்டு வேலைகளைத் தொடங்க தயாராகி விட்ட நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் உண்மை அறிந்து பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.