அண்ணாவின் காலைத்தொட்டு வணங்கி பாராளுமன்றம் வந்தார் வைகோ! சு.சாமி நேரில் வாழ்த்து

டில்லி:

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ள  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று டில்லியில் உள்ள பாராளுமன்றம் சென்றார்.

பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வைகோ முதலாவதாக அங்குள்ள அண்ணா சிலையின் காலடியில் விழுந்து வணங்கிய பிறகே நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமியையும் சந்தித்து பேசினார். அப்போது, வைகோவுக்கு சாமி வாழ்த்து தெரிவித்தார்.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட வைகோவுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தேர்தல் ஆணையம் அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நிலையில், அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போதைய  நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களும் வரும் 25ந்தேதி பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எம்.பியாகி,  நாடாளுமன்றத்துக்குள்  நுழைகிறார் வைகோ. முன்னதாக இன்று டில்லி வந்த, வைகோ, அங்குள்ள அண்ணா சிலையை வணங்கினார். தொடர்ந்து  மேலும் லோக்சபா நுழைவாயிலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னரே  வைகோ நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார், அங்கு பல்வேறு உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அவருக்கு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வைகோ எம்.பி.யாவதற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்த சுப்பிரமணியன் சாமியும், சந்தித்து பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து டிவிட் போட்டுள்ள சுப்பிரமணியசாமி,  வைகோவை நாடாளுமன்றத்தில் பார்த்ததும் ஓடிச் சென்று வாழ்த்து தெரிவித்தேன். அவரும் பத்திரிகையாளர்களிடம் என்னை பற்றி நல்லவிதமாகவே கூறினார். ஜனநாயகத்தில் பண்பாடு என்பது அவசியமானது. அரசியல் சட்டம் என்பதும் புனிதமானது  என்று தெரிவித்து உள்ளார்.