சித்திரை வாழ்த்து: வைகோ

இன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரனிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து:

இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள் தான் சித்திரை முதல் நாள் ஆகும். முத்திரை பதிக்கும் முழுமதியோடும், புதுப் பொலிவோடும் சித்திரைத் திருநாள் பிறக்கின்றது. இவ்வாண்டு சித்திரை நாள், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 126 ஆவது பிறந்த நாளாக மட்டும் அல்ல; இயேசுநாதரின் சிலுவைப்பாடு முடிந்த புனித வெள்ளியாகவும் மலர்ந்துள்ளது.

மீண்டும் உயிர்த்தெழும் ஈஸ்டர் நம்பிக்கையைச் சுமந்தபடி மலர்ந்து இருக்கும் இந்தச் சித்திரைத் திருநாள், விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும்; வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கட்டும்.

தாய்த் தமிழகத்தில் மது அரக்கனின் கொடுமை நீங்கவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றித் தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவூட்டிடவும் களத்தில் இறங்கிக் கடமை ஆற்றுவோம். தரணி எங்கனும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.