சென்னை:

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு  2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று லோக் சபா மற்றொன்று ராஜ்யசபா என்று உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி தலைமையில், மெகா கூட்டணி உருவாகி உள்ளது. இதில்,   மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

ஏற்கனவே  திமுக காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்பட்டு, 10 தொகுதிகள் ஒதுக்கப்படு விட்ட நிலையில், நேற்று நடைபெற்ற 2வது கட்ட பேச்சு வார்த்தையில், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தானது. ஆனால், மதிமுக, சிபிஎம் கட்சிகளுடன் உடன்பாடு ஏற்படாமல் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கில் நீடித்தது.

இந்த நிலையில், இன்று 3வது வது கட்ட பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றது. இன்று காலை நடைபெற்ற சிபிஎம் கட்சியுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மதிமுகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, செங்குட்டுவன் உள்பட மதிமுக நிர்வாக்கள் திமுக அணியினருடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு, ஸ்டாலின் முன்னிலையில்  ஒப்பந்தம் போடப்பட்டது.. அதன்படி, மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியில், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தொகுதி ஒதுக்கீட்டில் தனக்கு முழு திருப்தி என்றும், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை  மதிமுக உயர்நிலை குழு கூட்டம்  நடைபெற்றது. அதில், கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் நிறைவடைந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயம் வந்தார் வைகோ.