தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க தலைவர் வைகோ மட்டும் தான்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டும் தான் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கு குறித்து செய்தியாளர்களை விமான நிலையத்தில் சந்தித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இல்லை. அதன் காரணமாக அதனுடைய கூட்டணி கட்சிகளையும் தற்போது தூண்டிவிட்டு, பல்வேறு வழக்குகளை போட்டு வருகின்றது. தமிழகத்தின் ஆளுமை மிக்க அரசியல் தலைவர் யாரும் இல்லை என்று திமுக உட்பட பல கட்சிகள் கூறுகின்றன. ஆனால் ஆளுமை மிக்க தலைவராக தற்போது வைகோ மட்டுமே இருக்கிறார். மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடும் வைகோவை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியுள்ள மாநிலம் தமிழம் மட்டும் தான் என்கிற அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை 2வது முறையாக அதிமுக அரசு பெற்றுள்ளது பெருமையாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.