சென்னை:

திமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்பு மனு ராஜ்யசபா தேர்தலுக்கு  ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்,  திமுக சார்பில் 4-வது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள என்.ஆர். இளங்கோ 11ந்தேதி  தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் 24 ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து, அந்த இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடங்களில் 3 இடம் திமுகவுக்கும், 3 இடம் அதிமுகவுக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரன், முகமது ஜான் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணி கட்சியான  பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தி.மு.க. சார்பில் வில்சன், சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவர்கள் தவிர சுயேட்சைகள் நான்கு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில் தேசத் துரோக வழக்கில் வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனை ஒரு மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையின் போது வைகோவின் வேட்பு மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகியுள்ளது. வைகோவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டால் திமுக சார்பில் 4-வது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள  என்.ஆர். இளங்கோ  தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது.