மேலசியாவிற்குள் நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.

மலேசியாவின் இந்த நடவடிக்கை தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  உள்ளது.

மலேசியாவில் நடந்தது என்ன?

வைகோவும், மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியும் நெருங்கிய நண்பர்கள். இராமசாமியின்   மகள் திருமண வரவேற்பு   நாளை ( ஜூன் 10 சனிக்கிழமை ) மாலை பினாங்கில் நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ல வைகோவுக்கு அழைப்பு விடுத்தார் இராமசாமி.

அழைப்பினை ஏற்று மலேசியாவுக்குச் செல்வதற்காக சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பம் செய்தார்.  மலேசிய தூதரகமும் கடந்த வாரமே வைகோவுக்கு விசா  அளித்துவிட்டது.

இதையடுத்து  நேற்று (08.06.2017)  நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ   மலேசியா புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர்  விமான நிலையத்தை அடைந்தார்.

அங்கு  மலேசிய குடிவரவு அதிகாரிகள், வைகோவிடம் “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே  எங்களது உயர் அதிகாரிகளைச் சந்தியுங்கள்” என்று  சொல்லி அழைத்துச் சென்றார்கள்.

குடிவரவு உயரதிகாரிகள், “ மலேசியாவுக்கு ஆபத்து ஏற்படுத்துபவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறது” என்றனர்.

அதற்கு வைகோ, “நான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் செயல்படும் அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன். இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறேன். என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு கூறுவது  அதிர்ச்சியாக இருக்கிறது” என்றார்.

அதற்கு அதிகாரிகள், “ நீங்கள் இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்” என்று கூறினர்.

அதற்கு வைகோ, “விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரிப்பவன் நான். ஈழ மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறேன். அதற்காக மலேசியாவுக்கள் என்னை அனுமதிக்க முடியாது என்பது என்ன நியாயம்? நான் எனது நண்பரின் குடும்ப விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கிறேன்” என்றார்.

ஆனாலும் அதிகாரிகள், “இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

இதை மறுத்த வைகோ, “நான், இந்திய குடிமகன்.” என்றார். மேலும், “உங்களது அரசின் கீழ் இயங்கும் சென்னை தூதரகம்தான் எனக்கு கடவுச்சீட்டு (விசா) அளித்துள்ளது. பிறகு ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு பதில் அளிக்காத அதிகாரிகள், வைகோவிடம் இருந்த விசாவை வாங்கி வைத்துக்கொண்டன்.

இந்த நிலையில் வைகோவின் உதவியாளர், பினாங்கு துணை முதல்வர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் அவர்களும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, பேசினார்கள்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. “மலேசிய துணைப் பிரதமர் அலுவலகத்தில் இருந்தே எங்களுக்கு உத்தரவு வந்துவிட்டது. வைகோவை  அனுமதிக்க முடியாது”  என்று  தெரிவித்துவிட்டார்கள்.

பிறகு  குடிவரவு அலுவலகத்தில் உள்ள சற்று ஒதுங்கிய பகுதியில் வைகோவை  அமரவைத்தனர். மேலும், “இந்த இடத்தை விட்டு எழுந்துபோகக் கூடாது. உங்கள்  உதவியாளர் முதல் மாடியில் உள்ள உணவகத்துக்குச் சென்று உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரட்டும்” என்றனர்.

அதற்கு வைகோ, “நான் எதுவும் சாப்பிட விரும்பவில்லை,” என்று  தெரிவித்தார்.  அதிகாரிகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியும் வைகோ உணவருந்த மறுத்துவிட்டார்.

இதற்கிடையே பினாங்கு துணை முதல்வர் இராமசாமி  வைகோவிடம்,  “உங்களை ஏதும் துன்புறுத்தினார்களா?” என்று கவலையோடு கேட்டார். அதற்கு வைகோ, “அப்படி எதுவும் இல்லை. ஆனால் எவரையும் சந்திக்க முடியாத இடத்தில் அமர  வைத்து இருக்கின்றார்கள்,” என்றார்.

 

தற்போது வைகோ மலேசிய விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அலுவலகத்தில்தான் உள்ளார்.   இரவு 10.45 மணிக்கு சென்னை வந்து சேரும்  மலேசியன் ஏர்லைன்ஸ்  விமானத்தில்  அவரை திருப்பி அனுப்ப திட்டமிட்டிருக்கிறார்கள்.