கொச்சைப்படுத்துகிறது!: ஜெ. மரணத்தில் மர்மம் என்று கூறிய நீதிபதிக்கு வைகோ கண்டனம்!

 

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தது வேதனை அளிப்பதாக வைகோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது எனவும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரிரியும் ஜோன்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடுத்துள்ளார்.

இதை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரா வைத்தியநாதன் இதே சந்தேகம் தனக்கும் உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் அவர், “நான் இந்த வழக்கை விசாரிப்பதாக இருந்தால் ஜெயலலிதாவின் உடலை வெளியில் எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிடுவேன்” என்றும் தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இது குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

அவர், “நீதிபதியின் கருத்து வேதனைக்குரியது. அவர் அப்படி பேசியிருக்கக்கூடாது. அவரது கருத்து ஜெயலலிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதாக அந்தக் கருத்து உள்ளது.

ஜெயலலிதா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஒரு புகைப்படமாவது வெளியிட்டு இருக்கலாமே என்கிறார்கள். அவர் ஒரு பெண்மணி. அதிலும் அரசியல் அரங்கில் தலைவர்களால் மதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவர் சிகிச்சை பெறும் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று கருதி இருக்கலாம்” என்று வைகோ தெரிவித்தார்.

மேலும் அவர், “கூட்டணி குறித்து தற்போது சொல்ல முடியாது.. மக்கள் நலக்கூட்டணியில் இருந்து நாங்கள் விலகியதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கமாக கூறிவிட்டேன். அது பற்றி இனி எதுவும் சொல்வதற்கு இல்லை. தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்போம்” என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு குறித்து தெரிவித்த அவர், ,”ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுத்தது நான். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து மனு கொடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அந்த மனுவில் கையெழுத்திட்டார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருவதாக  தெரியவருகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார் வைகோ.
 

கார்ட்டூன் கேலரி