ஈழ இனப்படுகொலை: ஐ.நா., மனித உரிமை கவுன்சிலுக்கு வைகோவின் விளக்க அறிக்கை

 

ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து ஐ.நா.வுக்கும், மனித உரிமை கவுன்சிலுக்கும்  விளக்க அறிக்கையை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ளதாக அக் கட்சி தலமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

உலகத்தின் மனசாட்சியை உலுக்கிய ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து கடந்த 60 ஆண்டு காலத்தில் சிங்கள அரசு செய்த கொடுமைகளையும், ஐரோப்பியர் வருகைக்கு முன் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்கள் தனி அரசு அமைத்து வாழ்ந்த சிறப்பையும், தமிழர்கள் உரிமைகளுக்காக அறவழியில் போராடியதையும், 1976 மே 14 இல் வட்டக்கோட்டையில் தந்தை செல்வா அறிவித்த சுதந்திரத் தமிழ் ஈழப் பிரகடனத்தையும், இராணுவத்தின் துணை கொண்டு சிங்கள அரசு நடத்திய கொடிய அடக்குமுறையை எதிர்த்து தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மூண்டெழுந்த ஆயுதப் புரட்சியையும், ஈழத் தமிழர்களுக்கு காங்கிரÞ தலைமையிலான இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகத்தையும், மனித உரிமைக் கவுன்சிலில் ஈழத்தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டதையும், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அமைத்த மூவர் குழு அறிக்கையையும், மைத்ரி சிறிபாலசேனா அரசு தொடர்ந்து நடத்துகிற சிங்களக் குடியேற்றத்தையும், தமிழர்களுக்கு எதிரான அநீதியையும் பட்டியலிட்டு வைகோ விளக்கமான ஆங்கில அறிக்கைகளை ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோணிய குத்தேரசு அவர்களுக்கும், ஜெனீவா மனித உரிமைக் கவுன்சில் ஆணையர் அல்ராத் உசேன் அவர்களுக்கும் தனித்தனியாக மின் அஞ்சலில் அனுப்பியதோடு, துரித அஞ்சல் மூலமும் அனுப்பி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச நீதி விசாரணை வேண்டும். சிங்கள இராணுவம், போலிÞ, சிங்களக் குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிக்கையில் சேனல்-4 வெளியிட்ட தமிழர் படுகொலைக் காட்சிகளையும், அண்மையில்கூட இரண்டு யாழ்ப்பாண மாணவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட அண்மைக் கால நிகழ்வுகள் அனைத்தையும் வைகோவின் அறிக்கை விளக்கமாகத் தெரிவிக்கிறது.

ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2012 மார்ச் 27 ஆம் தேதியில் அன்றைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், சபையில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தனது அறிக்கையோடு இணைத்து வைகோ அனுப்பி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.