சென்னை:

வைகோவின் அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ஏற்கனவே பேசியதுபோல இனிமேல் பேசக்கூடாது,  ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும் என்ற அறிவுறுத்த லுடன் அவர்மீதான சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டு உள்ளது.

தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் , தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது.   அப்போது, வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வைகோ பேச்சு தொடர்பான வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்றும், போலீசார் மட்டுமே அரசு தரப்பு சாட்சிகளாக சாட்சியளித்ததாகவும் வாதிட்டார்.

இதையடுத்துரு,  அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர், வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக இருந்தால், இந்த வழக்கு முடியும் வரை இது போன்ற பேச்சுக்களை  பேசக் கூடாது என நிபந்தனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆதிகேசவலு, வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டதுடன், இனி வரும் காலங்களில், வைகோ, பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும், பேசும் முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து பேச வேண்டும் என்றும் வைகோவுக்கு அறிவுறுத்தினார்.