Random image

வைகோ அருமை, அவரது காலத்துக்குப் பின்பே தெரியும்!

சரவணன் சவடமுத்து ( Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு:

“நடந்து முடிந்த தேர்தலில் வைகோ ஒருங்கிணைத்த மகக்ள் நலக் கூட்டணி அதிமுகவின் பி டீம் என்றும், அதிமுகவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காகவே அவர் எதிர்க்கட்சிகளை ஓரணிக்குக் கொண்டு வந்திருக்கிறார் என்றும் பல அரசியல் ஆய்வாளர்கள் எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

எனது இனிய நண்பர் சவுக்கு சங்கர்கூட இது போலவே எழுதியதில் எனக்கு பெருத்த வருத்தம். ஏமாற்றமும்கூட..!

வைகோவை பொறுத்தமட்டில் தி.மு.க., அதிமுகவுக்கு மாற்றாக மதிமுக வர வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசைப்பட்டார். ஆனால் அது நிராசை என்பது அவருக்கே தெரிந்துவிட்டது.

தனித்து நின்று அவர்களை அசைக்க முடியாது என்பதால் கூட்டணி வைத்தாவது அவர்களை அசைத்துப் பார்ப்போம் என்று நினைத்துதான் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒரு அணிக்குக் கொண்டு வந்தார். இதில் எந்தத் தவறுமில்லை.

ஏதோ ஆத்தாவுக்காக அவர் பம்பரமாக சுற்றி வேலை பார்த்து இப்போது ஹாயாக உட்கார்ந்திருக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் எழுதுவதை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

இதற்குத்தான் அந்த மனிதர் இந்த ஒரு வருட காலமாக நாய் மாதிரி ஊர், ஊராக அலைந்தாரா..? ஆத்தாவுக்கு மறைமுகமாக ஆதரவு தர வேண்டுமெனில் எதற்கு இத்தனை இத்தனை ஆர்ப்பாட்டம்.. ஒரே நாளில் 4 இடங்களில் கூட்டம். இந்த ஒரு வருடத்தில் அவருடைய பெரும்பாலான நேரங்கள் பயணித்திலேயே கழிந்திருக்கிறது.

வைகோ
வைகோ

அவர் மட்டுமல்ல.. ம.ந.கூட்டணியில் இடம் பெற்ற தலைவர்களையும் அழைத்துக் கொண்டு அவர் மக்களிடத்தில் கேட்டது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்பதுதான்.

இதில் உள் நோக்கம் கற்பித்து எழுதுபவர்களுக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இதுபோல் ஒரு நாள் உழைத்துப் பாருங்கள். எத்தனை கோடி என்றாலும் ஆளைவிடுறா சாமி என்றுதான் ஓடுவீர்கள்..!

அதிலும் வைகோ போன்றவர்களை இது போன்ற கீழ்த்தரமான விஷயத்தில் சம்பந்தப்படுத்தி பார்க்கவே முடியாது.. “உணர்ச்சிவசப்படுபவர். சர்வாதிகாரி.. தன் கட்சியில் சொல்வதுதான் நடக்க வேண்டும். கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுசரித்து நிடக்கத் தெரியவில்லை. கட்சியை கீழே இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்” போன்ற குற்றச்சாட்டுக்களையெ்ல்லாம் நானும் ஒத்துக் கொள்கிறேன்..

ஆனால் பணம் வாங்கிக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்காகவே கூட்டணியைத் துவக்கினார் என்று பொய்யுரையை பரப்பாதீர்கள். இதற்கு மேல் ஒரு மனிதர் அந்த இரண்டு திருடர்களையும் எப்படி கண்டிப்பது..? எப்படி எதிர்ப்பது என்று எனக்குத் தெரியவில்லை..

திமுக மற்றும் அதிமுக கூட்டணி மிகப் பிரயத்தனப்பட்டு இந்தத் தேர்தலில் கடுமையாக உழைத்தமைக்கும், பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றமைக்கும் காரணமே மக்கள் நலக் கூட்டணி கடும் உழைப்புதான்.

பணம் கொடுக்காமல் கொள்கைகளை மட்டும் சொல்லியும் கேட்டு ஒருவர் தோல்வியடைகிறார் என்றால் தவறு அவர் மீதல்ல.. வாக்காளர்கள் மீதுதான். தமிழக வாக்காளர்கள் செத்துவிட்டார்கள் என்றுதான் அர்த்தம்..!

மீண்டும் ஒரு முறை தங்களது தலையில் மண்ணையள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார்கள் தமிழக வாக்காளர்கள்.

ஒருவருடைய அருமை அவர் இருக்கும்போது தெரியவே தெரியாதுதான். வைகோவின் அருமை அவருடைய காலத்திற்கு பின்பே தமிழகத்திற்குத் தெரியப் போகிறது..!