வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் நாளை அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம்:

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திவ்யதேசங்களில் பிரதசித்தி பெற்ற  ஸ்ரீரங்கத்தில் நாளை அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும்,  பூலோக வைகுண்டம் என கூறப்படும் ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில்  வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு பெரும் பிரசித்தி பெற்றது. இதற்காக நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் (டிசம்பர்)  26-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து,   27-ந் தேதி பகல் பத்து நாள் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் தினமும் காலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை அளித்து வருகிறார்.

ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அச்சமயத்தில், நம்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு,  அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசலைக் கடந்து  பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர், பிரகாரத்தில் உள்ள மணல்வெளியில் பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சொர்க்கவாசல் தரிசனத்தைக் காண  லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்து வருகின்றன்ர. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கோவிலுக்குள்  வரிசையாக செல்ல தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை அனைத்து பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் ராஜ கோபுரம் முன்பு மற்றும் அம்மா மண்டபம், சித்திரை வீதியில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.  விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கமே பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, 108 திவ்யதேசங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.