ஆண்டாள் குறித்து தவறாக பேசிய திரைப்பாடலாசிரியர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட கவிஞர் வைரமுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் பேசினார். தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் அவர் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுள் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம், ஆகியவை குறித்து அவர் விளக்கிய விதம் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய வைரமுத்துவும், இதற்கு தளம் அமைத்து கொடுத்த தினமணி நாளிதழும்  வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்துக்களின் மத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்துவது என்பது வைரமுத்து போன்றவர்களுக்கு வழக்கமாக உள்ளது.. ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியது விஷமத்தனமானது. ஒரு அநாகரீகமான நபருக்கு தினமணி களம் அமைத்துக் கொடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது கண்டிக்கத்தக்கது. தினமணி நாளிதழின் தரமும் மரியாதையும் ஒரு நொடியில் குலைந்து போனது. தினமணி நாளிதழ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று எச்..ராஜா தெரிவித்துள்ளார்.