சிவந்து போன எம்ஜிஆரின் கன்னம்.. வைரமுத்து பேச்சால் சர்ச்சை..

கவிஞர் கண்ணதாசனுடன் பிணக்கு ஏற்பட்ட பின் எம்.ஜி.ஆர்.படங்களுக்கு கவிஞர் வாலி தான் ஆஸ்தான பாடல் ஆசிரியராக இருந்தார்.

அரசகட்டளை படத்தின் போது வாலியுடனும் எம்.ஜி.ஆருக்கு உரசல் உருவானது.ஏன்?

சென்னை காமராஜர் அரங்கில் இரு தினங்களுக்கு முன்பு   நடைபெற்ற கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழாவில் இந்த தகவலை வெளியிட்டார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்து பேசியதன் சாராம்சம் இது.

அரசகட்டளை படத்தில் ஒரு பாடல்.மன்னர் ஆட்சியை எதிர்த்து ஏற்படும் புரட்சியின் போது இடம் பெறும் பாடல் அது. வழக்கம் போல் பாடல் எழுதும் பொறுப்பு வாலிக்கு கொடுக்கப்பட்டது.

பாடலை எழுதி கொடுத்தார் வாலி. எம்.ஜி.ஆரிடம் இருந்த பாராட்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் வாலி. ஆனால் கிடைத்ததோ வசை.

காரணம்?.

பாடல் வரிகள்.

‘’ ஆண்டவன் கட்டளை முன்னாலே உன் அரச கட்டளை என்னாகும்?’’ என்று பாடல் ஆரம்பமானது.

பாடலை கேட்ட எம்.ஜி.ஆர்.கன்னம் சிவந்து போனது.ஏற்கனவே அவரது கன்னம் சிவப்போ சிவப்பு. பாடலை கேட்டதும் ரத்தச்சிவப்பானது –எம்.ஜி.ஆர்.கன்னம்.

நல்ல வரிகள் தானே? ஏன் எம்.ஜி.ஆர்.கோபம் அடைந்தார்?.

காரணம் இது தான்.

எம்.ஜி.ஆர். அரசகட்டளை படத்தை டைரக்ட் செய்து நடித்து கொண்டிருந்த நேரத்தில் (படத்தில் -இயக்கம் என்று எம்.ஜி.சக்ரபாணி பெயர் இடம் பெற்றிருக்கும்) சிவாஜி ‘ஆண்டவன் கட்டளை ‘படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.

பி.எஸ்.வீரப்பாவின் சொந்த படம்.

எம்.ஜி.ஆரின் அரசகட்டளையை விட சிவாஜியின் ஆண்டவன் கட்டளையை மக்களிடையே உயர்த்தி பிடிக்கும் வகையில் பாடல் வரிகள்  அமைந்திருந்ததால் எம்.ஜி.ஆர். கோபம் கொள்ள நேர்ந்தது.

இந்தப் பேச்சைக் கேட்டதும் ஆரம்பத்திலேயே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அந்த முணுமுணுப்பின் அர்த்தம் இதுதான். சிவாஜி நடித்த ஆண்டவன் கட்டளை படம் 1964 ல் வெளியானது. எம்ஜிஆரின் அரசகட்டளை படம் வெளியானது 1967-ல்.. ஆண்டவன் கட்டளை தொடங்கப்பட்டபோது அரசகட்டளை படம் தொடங்கியது என்று எடுத்துக் கொண்டாலும் கூட ஒரு விஷயம் இடிக்கிறது. அரசகட்டளை படத்தில்  சரோஜாதேவி உடன் ஜெயலலிதாவும் நடித்து இருந்தார்.. ஜெயலலிதா நடித்த முதல் தமிழ் திரைப்படம் வெண்ணிற ஆடை 1965ல் தான் வந்தது. அப்படியிருக்க ஆண்டவன் கட்டளைக்கும் அரசகட்டளைக்கும் இடையே பாடலில் எப்படி தொடர்பு வந்தது என்பது வைரமுத்துக்கே வெளிச்சம்.

 

– ஏழுமலை வெங்கடேசன்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-