வைரமுத்துவின் மெளனம் சந்தேகத்தை எழுப்புகிறது!:  கஸ்தூரி ட்விட்

வைரமுத்துவின் சந்தேகம், அவர் மீது சந்தேகத்தை எழுப்புகிறது என்று பிரபல நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தற்போது ட்விட்டரில் மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து எழுதி வருகிறார்கள். இதில் பிரபலமான பலர் மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சில பெண்கள் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார்கள். இதை ஆமோதித்த பிரபல பாடகி சின்மயி, தன்னிடமும் வைரமுத்து தகாத முறையில் நடக்க முயன்றதாக பதிவிட்டார்.

இக்குற்றச்சாட்டுக்களை வைரமுத்து மறுத்தார்.

“அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று வைரமுத்து தெரிவித்தார்.

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “வைரமுத்து.. உண்மையை காலம் சொல்லுமா? ஏன் நீங்களே சொல்லலாமே? சின்மயியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள். அது மஞ்சள் பத்திரிக்கையில் வந்த கிசுகிசு அல்ல, அலட்சியப்படுத்துவதற்கு. உங்கள் உதாசீனமும் மௌனமும் உங்கள் மேல் விழுந்துள்ள சந்தேகத்தை வலுக்க செய்கிறது” என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.