‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் – அரையிறுதிக்கு முன்னேறிய தமிழகத்தின் வைஷாலி..!

சென்னை: தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, பெண்களுக்கான ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் ஆன்லைன் தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இத்தொடர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படுகிறது. மொத்தம் 4 கிராண்ட் பிரிக்ஸ் பிரிவுகளாக நடத்தப்படுகிறது. மொத்தம் 22 பேர் இத்தொடரில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ‘கிராண்ட் பிரிக்ஸ்’ பிரிவிலும் நாக்-அவுட் முறையில் 16 பேர் மோதுகின்றனர்.

இதில், முதல் கிராண்ட் பிரிக்ஸ் பிரிவின் முதல் சுற்றுப் போட்டியில், முன்னாள் உலக சாம்பியனும், பல்கேரிய செஸ் நட்சத்திரமுமான ஸ்டெஃபானோவாவை தோற்கடித்து காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார் வைஷாலி.

இந்நிலையில், காலிறுதிப் போட்டியில் மங்கோலிய நாட்டின் வீராங்கனை துர்முன்க்கை எதிர்கொண்டார். இப்போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம், இத்தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.