வைத்தீஸ்வரன் கோவிலில் தலவிருட்சம் அடியோடு முறிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி

வைத்தீஸ்வரன் கோவில்

மிழகத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான தல விருட்சம் மழையால் அடியோடு விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவில்கள் அனைத்துக்கும் ஒரு தல விருட்சம் எனப்படும் மரம் ஒன்று வளர்க்கப்படும். அந்த மரம் ஆண்டவனுக்கு ஒப்பாக போற்றப்படும். அவ்வகையில் நாகை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் தலத்தில் வேப்பமரம் தல விருட்சமாக உள்ளது. இந்த கோவில் நவக்கிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாகும்.

கோவிலின் கிழக்கு கோபுர வாசல் நுழைவாயிலில் இந்த தல விருட்சமான வேப்பமரம் இருந்தது. இந்த மரம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சொல்லப்படுகிறது. இந்த மரத்தை வழிபட்டு கோவில் பிரசாதமான தீர்த்த மண் உருண்டையை 48 நாட்கள் சாப்பிட்டால் பல வியாதிகள் நீங்கும் என்பது கோவிலின் ஐதீகம் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வேப்பமரத்தின் மிக பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இந்த பகுதியில் நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த ம்ழையில் வைத்தீஸ்வரன் கோவில் தல விருட்சமான இந்த வேப்பமரம் அடியோடு முறிந்து விழுந்து விட்டது. அப்போது கடுமையான மழை பெய்துக் கொண்டிருந்ததால் யாருக்கும் மர முறிவினால் விபத்து ஏற்படவில்லை.

இந்த மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு வண்டுகள் அந்தப் பகுதியில் எக்கச்சக்கமாக பறக்கத் தொடங்கின.ஆகையால் பக்தர்களை அந்தப் பகுதிக்கு அனுமதிக்காத கோவில் நிர்வாகம் சீர்காழி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரரக்ள் தீப்பந்தம் மூலம் வண்டுகளை விரட்டினர். விழுந்த மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கோவிலான வைத்தீஸ்வரன் கோவிலின் தல விருட்சம் அடியோடு முறிந்து விழுந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.