வாஜ்பாயின் அஸ்தி கலசம் தமிழிசையிடம் ஒப்படைப்பு: சென்னையில் 2 நாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

சென்னை:

றைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கலசம் தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்த அஸ்தி கலசம் மாநில பாஜ தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

வயது முதிர்வு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16ந்தேதி சிகிச்சை பலினின்றி மறைந்தார். அவரது உடல் தகனம் 17ந்தேதி டில்லியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள 100 முக்கிய ஆறுகள், நதிகள், கடல்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முக்கிய ஆறுகள், கடல்களில் வாஜ்பாஸ் அஸ்தியை கரைக்க  மாநில தலைவர்களிடம் இன்று அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது.

டில்லியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட முக்கிய நிர்வாகிள், மாநில பாஜ தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, மாநில பாஜ தலைவர்களிடம்  அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்பட்டது. தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம், பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கலசத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணனும் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்த செய்தியாளர்களை சந்தித்த   தமிழிசை சவுந்தரராஜன் , வாஜ்பாயின் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கமலாலயத்தில் இன்றும், நாளையும்  வைக்கப்படும்.  அதன்பின்னர் 26ந்தேதி பவுர்ணமி அன்று அஸ்தி கரைக்கப்படும் என கூறினார்.

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது.  அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பை பெற்ற  வாஜ்பாய் அஸ்தியை கரைப்பது ஆன்மிக கடமை என்றார்.

வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமாரி கடலில் கரைக்கப்பட உள்ளது. அதுபோல, ஸ்ரீரங்கத்தில் காவேரி ஆற்றிலும், மதுரை அருகே வைகை ஆற்றிலும், ஈரோடு அருகே பவானி ஆற்றிலும் கரைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.