‘வலிமை’ இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என உறுதியாகியுள்ளது…!

--

 

 

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், படத்தின் அரங்குகள் தயாராகாத காரணத்தால் டிசம்பர் 14-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

அதில் சண்டைக் காட்சி ஒன்றையும் மற்றும் சில காட்சிகளையும் படமாக்கி முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. பெரிய ஷெட்டியூலாக பொங்கல் முடிந்தவுடன், ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திடீரென டி.இமான் இசையமைக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து படக்குழுவிடம் விசாரித்தபோது, வெளியான தகவலில் உண்மையில்லை, வெறும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது. எனவே, ‘வலிமை’ படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பது உறுதியாகியுள்ளது.