கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தாம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு இலவச அறிவிப்புக்களை வழங்கி வருகிறது.  வழக்கமாக இலவச அறிவிப்புக்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பாஜகவும் தற்போது வாக்குகளைப் பெற இலவச அறிவிப்புக்களை நம்பத் தொடங்கி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட், 18 முதல் 23 வயது வரை உள்ள பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம், மீனவர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.6000 நிதி உதவி என இலவச அறிவிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த இலவச அறிவிப்புக்கள் மூலம் தமிழக மக்களைக் கவர முடியும் என பாஜக நம்பி உள்ளது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தாம் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி எற்றால் இல்லத்தரசிகளுக்கு இண்டக்‌ஷன் அடுப்பு இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.   கோவை தெற்கு பகுதியில் பெண்கள் இடையே இதே பேச்சாக உள்ளது.  ஆயினும் அத்தனை பேருக்கும் இண்டக்‌ஷன் அடுப்பு வழங்குவது சாத்தியமில்லை எனவும் மக்கள் கூறி வருகின்றனர்.