அத்தியாயம் : 4
வெகுஜனப் பத்திரிகைகளில் வருகிற ஒருபக்கக்கதைகளைப் பலர் கேலி செய்வார்கள். ஆனால், அவற்றில் பல சுவையான முடிச்சுகளைக் காணலாம்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது வந்த ஒரு கதை, எழுதியவர் பெயர் நினைவிலில்லை, ஆனால் மையக்கதை மட்டும் மிகநன்றாக நினைவிலிருக்கிறது.
100680806364925509456662201869493345820
ஒருவன் MA தேர்வு எழுதியிருப்பான். அதன் முடிவுகளைப் பார்த்துக் கடிதம்  எழுதுமாறு தன் உறவுக்காரனிடம் சொல்லியிருப்பான்.
சில நாள் கழித்து, அந்த உறவுக்காரனிடமிருந்து ஒரு கடிதம் வரும். பிரித்துப்பார்த்தால், உள்ளே ஒரு வரிகூட இருக்காது. வெற்றுக்கடிதம்.
அவன் அதிர்ந்துபோவான், தன் உறவுக்காரனைக் கண்டபடி திட்டுவான்.
அப்போது, அவனுடைய மனைவி கடிதத்தைப்பார்த்துவிட்டு, ‘வாழ்த்துகள்ங்க, நீங்க MA பாஸ் பண்ணிட்டீங்க’ என்பாள்.
‘எப்படிச் சொல்றே? கடிதத்துல அப்படி எதுவும் எழுதலையே’ என்பான் அவன்.
‘முகவரியைப் பாருங்க, உங்க பேரைப்போட்டுப் பக்கத்துல MAன்னு எழுதியிருக்காரே, அதுதான் உங்க ரிசல்ட்!’
அதுபோல, வினைமுற்று ஒரே ஒரு சொல்தான். ஆனால், அதில் நாம் பல விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்.
உதாரணமாக, ‘வந்தான்’ என்ற வினைமுற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து நமக்குப் புரிகிறவை:
* வந்தவன் ஓர் ஆண் (திணை, பால்)
* தனியாக வந்தான், பலராக வரவில்லை (எண்ணிக்கை)
* ஏற்கெனவே வந்துவிட்டான் (காலம்)
இதேபோல், ‘வருகின்றன’ என்ற சொல்லை எடுத்துக்கொண்டால்:
* வந்தது உயர்திணை அல்ல, அஃறிணை (ஏதோ மிருகம்)
* தனியாக வரவில்லை, பல மிருகங்கள் வந்துள்ளன
* இப்போதுதான் வந்துகொண்டிருக்கின்றன
இப்படி வினைமுற்றுகள்தான் ஒரு வாக்கியத்துக்குத் தனித்துவத்தைத் தருகின்றன. சுருங்க எழுத விரும்புவோர் இதனை நன்கு கற்கவேண்டும்.
இப்போது, மறுபடி ‘அகர முதல எழுத்தெல்லாம்’க்கு வருவோம், ‘முதல’ என்ற சொல் எப்படி வினைமுற்றாகிறது?
(வரும் வியாழன் அன்று அடுத்த அத்தியாயம் வெளியாகும்)