அத்தியாயம்: 7
காஃபியா டாஃபியா என்றொரு பிரபலமான மிட்டாய் விளம்பரம், நினைவிருக்கிறதா?
அந்த மிட்டாய் காஃபிச் சுவை கொண்டது. ஆகவே, அதைச் சாப்பிடுகிற சிலர் காஃபி குடிப்பதுபோல் உணர்வார்கள், வேறு சிலர் மிட்டாய் சாப்பிடுவதுபோல் உணர்வார்கள்.  ஆகவே, காஃபியா டாஃபியா என்ற விவாதம் என்றைக்கும் நடந்து கொண்டிருக்கும் என்பதுதான் அந்த விளம்பரத்தின் மையக்கருத்து.
nammalvar
நம்மாழ்வார் பாசுரமொன்றில் இதே போன்றதொரு நிரந்தர விவாதம் வருகிறது: இறைவனுக்குப் பெயர், உருவம் உண்டா?  இல்லையா?
இறைவனுக்கு ஆயிரம் திருப்பெயர்கள் உண்டு என்பார்கள் சிலர்.  ‘சஹஸ்ரநாமம்’ என்ற நூல்களே இந்த அடிப்படையில் அமைந்தவைதான்.
அதேபோல், இறைவனுக்குப் பல உருவங்களும் இருப்பதாக நம்பிக்கை. இதற்காகப் பக்தர்கள் வெவ்வேறு ஆலயங்களுக்குச் சென்று அவரது திருவுருவத்தை வணங்குவார்கள்.
வேறுசிலர், ‘எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்குப் பெயரேது? உருவம் ஏது?’ என்பார்கள். இறைவனின் பெயர்,  உருவத்தைவிட, அவ்வுணர்வுதான் முக்கியம் என்பது இவர்களுடைய கட்சி.
இந்த இருவரில் யார் சரி?
இதில் யாரும் தீர்ப்புச் சொல்ல இயலாது என்கிறார் நம்மாழ்வார். இந்த விவாதம் என்றைக்கும் நடந்து கொண்டு தானிருக்கும்:
பேரும் ஓர் ஆயிரம், பிற பல உடைய எம்பெருமான்,
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை, அலது இல்லை பிணக்கே.
(தொடரும்)