சென்னை:
ட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமகவிற்கு இடையே பிப்ரவரி 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு கோரி பாமகவின் சார்பில் டிசம்பர் முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இடையே தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை தளர்த்திக் கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை உள் ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதனிடையே ராமதாஸை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு குழுவும், பாமக குழுவும் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் சந்தித்து பேசலாம் என்றும், அந்தப் பேச்சுக்களின் போது இட ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர்களுடனான சந்திப்பு குறித்து இன்று நடைபெற்ற பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் ராமதாஸ் விளக்கினார். நிர்வாகக் குழுவில் நடைபெற்ற விவாதங்களின் முடிவில் தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிப்ரவரி 3ம் தேதி அரசுடனான பேச்சுகளில் பங்கேற்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முடிவைப் பொறுத்து நிர்வாகக் குழுவை மீண்டும் கூட்டி அரசியல் முடிவை எடுப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.