21அம்ச கோரிக்கைகள்: தமிழகம் முழுவதும் விஏஓக்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

சென்னை:

21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விஏஓக்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் செய்கின்ற னர். இந்த போராட்டத்தில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஏஓக்கள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப் பட்டு உள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக (விஏஓ) பணியாற்றுபவர்கள் பணியாற்றக்கூடிய கிராமத்தில் மட்டுமே தங்கி இருக்க வேண்டும் என்று விதிமுறை மாற்றப்பட்டது. இதற்கு விஏஓ சங்கத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். அப்போது, குறைந்த பட்சம் விஏஓ பணியாற்றும் கிராமத்திற்குட்பட்ட வட்டத்திற்குள் வசிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாவது விதிமுறையில் மாற்றம் வேண்டும் என்று கோரினர். அதைத்தொடர்ந்து, அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு இதுவரை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கூறி  21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று முதல், மாநிலம் முழுவதும்  காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், வருவாய்த்துறை பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமம் மற்றும் ஊராட்சி பகுதிகளில்  சாதி சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா போன்றவற்றை வழங்குவதுடன்,  வருவாய்துறை சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் விஏஓக்கள் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது விஏஓக்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பொதுமக்கள் அவதிப்படும் சூழல் உருவாகி உள்ளது.