https://twitter.com/varusarath/status/1236498983742103552

இன்று (மார்ச் 8) உலமெங்கும் சர்வதேச பெண்கள் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் பெண்கள் தினத்தை முன்னிட்டு தான் வாழ்த்து தெரிவிக்க போவதில்லையென வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்

மேலும் அவ்வீடியோவில்:-

”அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள் எனச் சொல்வேன் என்று எதிர்பார்த்தீர்கள். ஆனால், நான் அப்படிச் சொல்ல மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் தினமும் பெண்கள் தினம் தான். இன்று ஒரு நாள் மட்டும் கொண்டாடி விட்டு, மீதி நாட்களில் எல்லாம் தினசரி நாளிதழ்களைத் திறக்கும் போது பாலியல் துன்புறுத்தல், தற்கொலை எனப் பார்க்கும் போது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

பெண்கள் தினம் என்பது சந்தோஷமாகவே இல்லை. தினமும் பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும். ஆண்கள் பக்கத்தில் பெண்கள் சரிசமமாக இருக்கிறோம். காவல்துறையையோ, நீதிமன்றத்தையோ சார்ந்து இருப்பது எவ்வித பிரயோஜனமும் இல்லை. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் வெளியே செல்லும் போது தைரியமாக இருங்கள். நம் வீட்டில் இருக்கும் மிளகாய்ப் பொடி, பெப்பர் ஸ்ப்ரே உள்ளிட்டவை எல்லாம் நமது கையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு ஏதாவது ஒன்று நடந்தால், அதை முதலில் சந்திக்கப் போவது நாம் மட்டும் தான். அதுவும் தனியாகத் தான் சந்திக்கப் போகிறோம். முதலில் தனியாகத் தைரியமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு பக்கெட் தண்ணீருக்கு எவ்வளவு சண்டை போட்டுப் பார்த்திருக்கிறோம். ஆகையால், பெண்களுக்குச் சக்தியில்லை என்று சொல்லாதீர்கள். அவர்களுக்குச் சக்தி இருக்கிறது. ஒரு பிரச்சினை வந்தால் எப்படிச் சண்டையிடுவார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். பெண்ணாக இருக்கப் பெருமிதம் கொள்ளுங்கள். பெண்ணாகப் பிறந்ததை பாரமாக நினைக்காதீர்கள். முதலில் தைரியமாக இருங்கள். பெண்கள் தினத்துக்கு வாழ்த்துகள் சொல்லமாட்டேன். உங்களை நீங்களே தினமும் கொண்டாடுங்கள்”

இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.