சர்கார் மறு தணிக்கை : கோமளவல்லியின் கோபம்

சென்னை

ரசின் தலையீட்டால் சர்கார் திரைப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டதற்கு நடிகை வரலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி அன்று வெளியான சர்கார் திரைப்படத்துக்கு அரசு மற்றும் ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் ஒரு சில காட்சிகளுக்கும் வில்லியின் பெயருக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முக்கியமாக ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட இலவச பொருட்களான மிக்சி, கிரண்டர் உள்ளிட்டவைகளை தீயிலிட்டு கொளுத்தும் காட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்..

இதை ஒட்டி ஆளும் கட்சியின் எதிர்ப்பால பல இடங்களில் திரையரங்குகள் இப்படம் திரையிடுவதை நிறுத்தி வைத்தன. இயக்குனர் கைது செய்யப்படலாம் என்னும் தகவல் வந்ததால் அவர் முன் ஜாமீன் மனு அளித்துள்ளார். படத் தயாரிப்பு நிறுவனம் சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க ஒப்புக் கொண்டனர்.

இன்று சர்ச்சைக்குரிய காட்சிகளையும் கோமளவல்லி என்னும் பெயரையும் நீக்கி விட்டு மறுதணிக்கைக்கு படக் குழுவினர் அனுப்பி வைத்தனர்.  இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய கோமளவல்லி என்னும் வேடத்தில் நடித்த நடிகை வரலட்சுமி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை வரலட்சுமி தனது டிவிட்டரில், “ஒரு திரைப்படம் மூலம் தாம் மிரட்டப்படலாம் என அரசு பயப்படுகிறதா? நீங்கள் செய்யக் கூடாததை செய்து உங்கள் நிலையை நீங்களே மோசமாக்கிக் கொண்டுள்ளீர்கள் இனிமேலாவது இது போன்ற முட்டாள்தனமான செய்கையில் இருந்து  விலகி இருங்கள். இது படைப்பாற்றலின் சுதந்திரம்” என பதிந்துள்ளார்.