வரலாற்றில் சில திருத்தங்கள்!  தொடர் – கற்பு

அத்தியாயம் -4                                                     இரா.மன்னர் மன்னன்

மிழ் சமுதாயத்தில் பல விவாதங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்த ஒரு கருத்து ‘கற்பு!’. ‘ஒரு பெண் தனக்கு உரிமை உடையவனோடு மட்டும் உண்மையாக இருப்பது’ – என்று பிற்கால ஆணாதிக்கவாதிகளால் கற்புக்கு வரையறை வகுக்கப்பட்டு, இப்போது வழக்கிலும் புழங்குகின்றது.

எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லாத இந்த வரையறை, நாம் எல்லோரும் அறிந்த வரையறையாக இருப்பது ஒரு விரும்பத்தகாத வினோதம்.

அறிவியல் வளர்ச்சி மனிதர்களின் மனப்பான்மையை மாற்றுவது இல்லை, மாறாக ஏற்கனவே உள்ள மனப்பான்மைக்கு உதவி மட்டுமே செய்கின்றது என்பதைத்தான் கற்பு குறித்த சமீப கால சர்ச்சைகள் காட்டுகின்றன.

நவீன அறிவியலின் துணையோடு பெண்ணின் கன்னித்திரையைக் கற்போடு தொடர்புபடுத்தும் கொடுமை இன்று நாடெங்கும் நடக்கின்றது. இதனால் தடகளத்தில் பங்கேற்கும் பல பெண்கள் திருமணத்திற்குப் பின்பு கணவனுக்கு விளக்கங்கள் கூறும் நிலைக்குப் போவது கசப்பான எதார்த்தம்.

கற்பு என்றால் உண்மையில் என்ன? கற்பு தொடர்பாக உலவும் வரையறை ஏற்புடையதா?

தமிழில் ‘கற்பு’ என்றால் கற்பிக்கப்படுவது, அல்லது கல்வி என்பதுதான் நேரடியானப் பொருள். அது ஆகுபெயராக பலவற்றுக்குப் பொருந்தும். உதாரணமாக, சங்க இலக்கியத்தில் வடமொழி ‘எழுதாக் கற்பு’ என்று குறிக்கப்படுகிறது. இதன் அர்த்தம் ‘எழுத்து வடிவம் இல்லாத மொழி’ என்பது (சமஸ்கிருதத்திற்கு வரிவடிவம் கிடையாது). இங்கு கற்பு என்பது மொழியாக எடுத்தாளப்பட்டு உள்ளது.

தமிழின் மூத்த இலக்கண நூலான தொல்காப்பியம்

‘கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை’ – என்று கற்புக்கு வரையறை சொல்கிறது. இதில் உடல் ஒரு பொருட்டாகவே குறிக்கப்படவில்லை.

ஒளவையார் தனது கொன்றை வேந்தனில்

‘கற்பெனப்படுவது சொற்திறம்பாமை’ என்கிறார். அவர் கூறுவதற்கும் உடம்புக்கும் கூட தொடர்பே இல்லை. இரண்டு வரையறைகளும் மன உறுதியோடு மட்டுமே தொடர்புடையவை.

அப்போது கற்பு என்பது எங்குமே உடலோடு தொடர்புடைய ஒன்றாகக் கூறப்படவில்லையா? பெண்ணின் ஒழுக்கமாகக் கூறப்படவில்லையா? – என்றால், கற்பு காமத்தோடு தொடர்புடைய ஒன்றாகவும், பெண்ணுக்கும் உரியதான ஒரு ஒழுக்கமாகவும் தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டு உள்ளது. பெண்ணின் மாண்புகளைப் பற்றிக் கூறும் இடத்தில் தொல்காப்பியர்,

’கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் என்ன கிளவோள் மாண்புகள்’

– என்று கற்பைப் பெண்ணின் மாண்புகளில் ஒன்றாகக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் பெண்கள் கற்போடு இருக்க வேண்டும் என்று தொல்காப்பியரே சொல்லிவிட்டார், நம் வேலை முடிந்துவிட்டது என்று நாம் விட்டுவிட முடியாது!. ஏனென்றால் தொல்காப்பியர் கூறும் கற்பு இன்று நாம் கருதும் கற்போடு பல வகையிலும் மாறுபட்டது. தொல்காப்பியர் காமத்துக்குப் பின் வருவது கற்பு – என்று குறிப்பிடுகிறார் என்ற ஒருவரித் தகவல் இங்கு சரியான திசைகாட்டியாக இருக்கும்!.

தொல்காப்பியத்தில் களவியல் என்று ஒரு இயல் இருப்பதைப் போலவே கற்பியல் என்ற ஒரு இயலும் இருக்கின்றது!. இந்த இயல் ஆண், பெண் உடலுறவுகளைப் பற்றிப் பேசவில்லை. உடலுறவு தொடர்பான செய்திகள் களவியலிலேயே கூறப்பட்டுவிடுகின்றன.

களவியல் என்பது திருமணத்திற்கு முன்னர் தலைவனும் தலைவியும் தனித்திருப்பது தொடர்பானது. இதற்கு மாறாக ஆண், பெண் இருவருக்கும் திருமணம் நடந்த பின்னர் நிகழும் சம்பவங்களையே கற்பியல் விளக்குகின்றது.

எடுத்துக்காட்டாக திருமணத்திற்குப் பின்னர் தனது தேவைகளுக்காக தலைவன் தலைவியை விட்டுப் பிரிவது கற்பியலில் கூறப்படுகின்றது. படிப்பு, பணம், பணி – என்று எந்தத் தேவையாகவும் அது இருக்கலாம். கணவனின் பிற பெண்களுடனான தொடர்பினால் தலைவி கொள்ளும் ஊடலையும் கற்பியல் காட்டுகின்றது. அப்படியென்றால் தொல்காப்பியர் காலத்தில் கற்பு என்ற வார்த்தை திருமணத்தையே குறித்து இருக்கின்றது.

தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரையும் திருமணத்தையே கற்பு என்று கூறுகின்றது. நச்சினார்க்கினியார் களவு மேற்கொள்ளும் அனைவருமே கட்டாயம் கற்பும் மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அதாவது உறவு கொள்ளும் தலைவனும் தலைவியும் பின்னர் கட்டாயம் திருமணம் செய்து கொள்ளவேண்டும்!. இதில் கந்தர்வர்களுக்கு மட்டும் விலக்கு உண்டு என்பதையும் அவர் சுட்டுகிறார். அந்தப் பாடல்

’கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும், ஈண்டுக்

கற்பின்றிக் களவே அமையாது’.

இந்த விளக்கங்கள் திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதற்கு அன்றைய சமூகத்தில் தடைகள் எதுவுமே இல்லை என்பதையே காட்டுகின்றன. இந்த செய்தி நாம் இன்று எதனை நமது பண்பாடு என்று கூறிக் கொண்டு இருக்கின்றோமோ அதற்கு நேர் எதிரானது!.

நச்சினார்க்கினியார் கற்புக்கு,

‘கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

கொளற்குரிய மரபிற் கிழவன் கிழத்தியை

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுமே’ – என்று நேரடியாகவே கூறிய இலக்கணம் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது. இதன்படி களவுக்குப் பிறகு தலைவன் தலைவி ஆகியோரின் பெற்றோர்கள் கூடி இருவரையும் திருமணத்தால் இணைப்பதே கற்பு!.

தமிழ் உலகம் போற்றும் திருக்குறளிலும் களவியலுக்கு அடுத்து ‘கற்பியல்’ உண்டு. கற்பியலின் கீழே 18 அதிகாரங்கள் வருகின்றன. அவை

1.   பிரிவு ஆற்றாமை

2.   படர்மெலிந்து இரங்கல்

3.   கண்விதுப்பு அழிதல்

4.   பசப்புறு பருவரல்

5.   தனிப்படர் மிகுதி

6.   நினைத்தவர் புலம்பல்

7.   கனவுநிலை உரைத்தல்

8.   பொழுது கண்டு இரங்கல்

9.   உறுப்புநலன் அழிதல்

10. நெஞ்சொடு கிளத்தல்

11. நிறை அழிதல்

12. அவர்வயின் விதும்பல்

13. குறிப்பறிவுறுத்தல்

14. புணர்ச்சி விதும்பல்

15. நெஞ்சொடு புலத்தல்

16. புலவி

17. புலவி நுணுக்கம்

18. ஊடல் உவகை – இவையும் திருமண வாழ்வில் தலைவன் – தலைவி பிரிவினையே பேசுகின்றன.

பின்னர் சிலப்பதிகாரக் காலத்தில்தான் கற்பு என்பது இன்றைய பொருளுக்கு வந்தது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியை இளங்கோவடிகள்

’கற்புக்கடம் பூண்ட கண்ணகித் தெய்வம்’ என்று எழுதுகிறார். பத்தினித் தன்மையை தெய்வ நிலைக்கு எடுத்துச் செல்கிறார். இதன் பின்னரே கற்பு குறித்த பேச்சுகள் தமிழ்ச் சமூகத்தில் அதிகரிக்கின்றன. இளங்கோவடிகளின் சகோதரனும் அரசனுமான சேரன் செங்குட்டுவனுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது, பாண்டிய அரசன் இறந்த உடன் அவனுக்காக இறந்த பாண்டிய மாதேவி கற்பில் சிறந்தவளா? அல்லது தன் கணவன் மீதான திருட்டுப் பழியைத் துடைத்து விண்ணுலகம் சென்ற கண்ணகி கற்பில் சிறந்தவளா? – என்று. அன்றைய விவாத அவைகளான பட்டிமன்றங்கள் இதனை விவாதிக்க ஆரம்பித்து, இன்றுவரை விவாதித்து வருகின்றன. ஆனால் இந்த விவாதத்தின் சுவாரசியத்தில் ’கற்பு என்றால் அடிப்படையில் என்ன?’ – என்பதைத் தமிழ் உலகம் சிந்திக்கத் தவறியே விட்டதுதான் சோகம்!.

கற்பு பற்றிய கருத்தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் ஆதிக்கம் செலுத்த, சிலப்பதிகாரத்தின் பின்வந்த பல நூல்கள் கற்பைப் போற்றின. அதில் குறிப்பிடத் தகுந்த நூல் கம்பரின் ராமாயணம்!. இதில் நூலின் பாவிகப் பாடலான ‘ஆசலம்புரி’ பாடலே கற்பைப் பற்றியதுதான்!. (பாவிகம் என்பது காப்பியத்தின் பண்பு என்கிறது தண்டியலங்காரம், எளிதாகச் சொல்வதானால் காப்பிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றுபடும் ஒரு முக்கியப் புள்ளியே பாவிகம்). ’அறத்தை நிலைநாட்டவே இராமன் பிறந்தான்’ என்று சொல்லும் கம்பராமாயணத்தில் அறத்திற்கு அடுத்தபடியாக அதிகம் போற்றப்படும் பண்பாக கற்பு இடம்பெற்று உள்ளது. கற்பு ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பாக நிற்கக் கூடியது, அவளை எந்த ஆபத்திலும் காக்கக் கூடியது என்ற காவிய சிந்தனை கம்பராமாயணத்தில் அதிகம் எடுத்தாளப்பட்டு உள்ளது. உதாரணமாக இதில் கம்பர் ’திட்டியின் விடமன்ன கற்பு’ என்று ஓரிடத்தில் குறித்து உள்ளார். திட்டி என்பது கண்களினாலேயே விஷத்தை உமிழும் ஒருவகை நாகம் ஆகும். அந்த நாகத்திற்கு விஷம் எப்படியோ அது போலவே பெண்ணுக்குக் கற்பு என்று கம்பர் காட்டுகின்றார்.

அவர் இப்படிக் கூறுவதால் அவருக்கே ஒரு சிக்கல் ஏற்படுகிறது. ‘ஒரு பெண்ணுக்குக் கற்பே காவலாக அமையும் என்றால், ஏன் சீதையின் கற்பு இராவணனைக் கொல்லவில்லை? இராமன் வர வேண்டிய தேவை என்ன?’ – என்ற சந்தேகம் படிப்பவர்களுக்கு ஏற்படும். இதற்காகவே சீதை இலங்கை வந்து தன்னைக் கண்ட அனுமனிடத்தில் சொல்வதாக

‘எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன், அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்’

– என்ற பாடலை கம்பர் எழுதுகிறார். ‘என்னால் ஒரு வார்த்தையினாலேயே எல்லை இல்லாத உலகங்கள் எல்லாவற்றையும் சுட்டெரிக்க முடியும், அது எனது கணவனுக்கு அசிங்கம், அவருக்கு வாய்ப்பளிக்கவே நான் அப்படிச் செய்யவில்லை’ என்பது இதன் பொருள்!.

பின்பு இலங்கையில் இருந்து மீண்டு, இராமனைக் கண்ட அனுமன் சீதையை ‘கற்பினுக்கு அணி’ என்றே குறிக்கின்றான்!.

இன்றைய சூழலில் ’கற்பு பெண்ணைப் பாதுகாக்கும்’ என்ற முந்தைய கருதுகோள் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாலும் ‘நீ கற்பற்றவள், உனக்குக் கற்பு இருந்திருந்தால் உன்னை நீயே காப்பாற்றிக் கொண்டு இருப்பாய்!’ – என்று சமூகம் அவள் மீது குறை சொல்லவே வழி வகுக்கின்றது என்பது மிகப்பெரிய சிக்கல்.

கற்பு என்ற சொல் பெண்ணின் ஒழுக்கமாக புழங்கிய அதே நேரத்தில் கற்பு என்பது கல்வி (அல்லது கற்பிக்கப்பட்ட ஒன்று) என்ற அதன் பொதுவான அர்த்தத்திலும் அதே சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தில் புழங்கியது.

பெரிய திருமொழியில் திருமங்கை மன்னர்

‘ஆழி ஏந்திய கையனை, அந்தணர்

கற்பினை கழுநீர் மலரும் வயல்

கண்ணமங்கையுள் கொண்டேனே’ – என்கிறார்.

இங்கு ’அந்தணர் கற்பு’ என்பது அந்தணரின் கல்வி என்ற பொருளிலேயே வந்துள்ளது.

இந்தக் கற்பு என்ற கருத்தாக்கம் ‘கற்பழிப்பு’ என்ற கருத்தாக்கத்திற்கும் வழி செய்தது. ஒரு ஆண் ஒழுக்கம் தவறிய நிகழ்வை, அதனால் பாதிக்கப்பட்ட பெண் கற்பினைத் தவறவிட்ட நிகழ்வாக தமிழ்ச் சமுதாயம் பதிவு செய்தது. தமிழகப் பத்திரிகைகள் கூட ‘பெண் கற்பழிப்பு’ என்று கொட்டை எழுத்துக்களில் செய்திகள் போட்டன. இலங்கையில் விடுதலைப் புலிகள் தன்னாட்சி செலுத்திய போது, அவர்கள் இந்த அபத்தத்தை உணர்ந்து தங்கள் இதழ்களில் ’கற்பழிப்பு’ என்ற வார்த்தையை முற்றாகத் தவிர்த்தனர். அதுபோன்ற இடங்களில் ‘வன்புணர்வு’, ‘வல்லுறவு’ போன்ற வார்த்தைகளை அவர்கள்தான் முதன் முதலில் பயன்படுத்தினர். இன்று அதனைப் பெரும்பாலான ஊடகங்கள் தொடர்கின்றன.

தமிழில் முதன்முதலில் கற்பழிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கருதப்படுபவர் சைவத்தின் நால்வரில் ஒருவரான சம்பந்தர். அவர்

’பெண் அகத்து எழில் சாக்கியப்பேய் அமண்

தெண்ணர் கற்பழிக்கத் திரு உள்ளமே’ – என்று பாடியுள்ளார். சமணர்களின் பெண்களுக்கும் கல்வி வழக்கம் இருந்தது. அதனை அழிக்க வேண்டும் என்று சம்பந்தர் கூறினார் என்பதே இதற்கு உரிய பொருள் ஆகும். தற்கால அர்த்தத்தை இதில் வைத்தால் மிக மோசமான பொருளே கிடைக்கும்.

கற்பு – என்பதை பெண்ணின் மிக உயர்ந்த ஆற்றலாக நாம் மக்களின் மனதில் பதிய வைப்பது நமது பண்பாட்டிலும் இல்லை, உலகுக்குத் தேவையானதும் இல்லை. கற்புடைய பெண் சொன்னதும் மழை பெய்யும், வாழை மரம் எரியும் – என்பது போன்ற கருத்துகளை முன்வைத்து, நாம் நமது சக பெண்களை சங்கடத்திற்கே உள்ளாக்குகின்றோம். யார்வீட்டில் மனைவி சொல்லி மழை பெய்தது? யாருடைய அம்மா வாழைமரத்தில் அடுப்பு எரித்தார்கள்? இலங்கையிலே சிங்களப் படையால் வன்புணரப்பட்டு உயிரிழந்த நம் அன்பு சகோதரிகள் கற்புத்திறம் இல்லாததனால் இறந்தார்களா? – இந்தக் கேள்விகளுக்கு பதில் என்ன?.

இன்னொரு பக்கம் பஞ்ச கன்னிகைகள் என்று வைதீக சமயம் போற்றும் கற்புக்கரசிகள் யார் யார் என்று பார்த்தால்,

1.   அகலிகை

2.   பாஞ்சாலி

3.   சீதை

4.   தாரை

5.   மண்டோதரி – என்ற பட்டியல் நமக்குக் கிடைக்கின்றது.

இவர்களில் முதலாவதாக உள்ள அகலிகை தனது கணவனான கவுதம முனிவரை விட்டு, இந்திரனோடு உறவு கொண்டவள். இரண்டாவதாக உள்ள பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவியாக இருந்தவள். மகாபாரதத்தின் ஒரு இடத்தில் பாஞ்சாலியின் மனம் இந்த ஐவரையும் காணும் முன்பு கர்ணனுக்காக சலனப்பட்டதாக கிருஷ்ணனே கூறுகிறார்!. இவர்களைத்தான் கற்புடைப் பெண்டிர் வணங்க வேண்டும் என்று மதம் வழிகாட்டுகின்றது.

இதனால் கற்பை பெண்ணின் ஒழுக்கமாக, தவறான புரிதலில் யாரும் காட்ட வேண்டாம். கற்பு கட்டாயம் சமூகத்தில் தேவை என்றால் பாரதியார் சொன்னதுபோல அதனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவில் வையுங்கள்.