லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் வாரனாசியில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த ஒரு மேம்பாலம் கடந்த 15ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் 18 பேர் இறந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தை இயற்கை பேரிடர் என்று அம்மாநில மேம்பால கழக நிறுவன மேலாண்மை இயக்குனர் ராஜன் மிட்டல் தெரிவித்துள்ளார். ‘‘மேம்பாலத்தின் தூண் இணைப்பில் ஏற்பட்ட தளர்வு அல்லது பேரிங் செயலிழப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதோடு மாநிலத்தில் வீசிய புழுதி புயலும் இதற்கு ஒரு காரணம். அதனால் இது இயற்கை பேரழிவு தான்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற கச்சா பொருட்கள் பயன்பாடு, தரமற்ற கட்டுமானம் போன்ற குற்றச்சாட்டுக்களை மூத்த அதிகாரிகள் மறுத்துள்ளனர். புழுதி புயல் தான் மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேம்பால கட்டுமான பணியை விரைந்து முடிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக முன் கூட்டியே பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

‘‘அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எனினும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கட்டுமான பணியில் பின்பற்றப்படும். மேம்பாலம் கட்டப்படும் பகுதி நெரிசல் மிகுந்த பகுதியாகும். கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு காவல்துறை, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றனர்.

‘‘இச்சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் நடந்து வரும் அனைத்து மேம்பாலம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்த பின்னரே பணிகள் தொடங்கப்படும்’’ என்று ராஜன் மிட்டல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.